புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி முதற்கட்டமாக இன்று விடுவிக்கப்பட்டது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தினர் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணியில் 7.5 ஏக்கர் காணி முதற்கட்டமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம. பிரதீபன் ஆகியோர் இன்று குறித்த காணிகளை இராணுவத்திடமிருந்து பொறுப்பேற்று பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கும் குடியேறுவதற்கும் விடுவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் 682ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 19 பேரினுடைய 7.75 ஏக்கர் காணி இரண்டு வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும், மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என்றும், பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் இதன்படி போராட்டத்தைக் கைவிடுமாறும் கடந்த வாரம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு புதுக்குடியிருப்பு மக்கள் உடன்படாத நிலையில் 7.5 ஏக்கர் காணி இடங்களை விடும் பட்சத்திலேயே, தாம் போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் தெரிவித்து இன்று காணிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தையும் கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like