காணமற் போனோரது உறவுகளுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் பேரணி

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சி நகரில் உள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவுகள், கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுத்துள்ள போராட்டம் கவனிப்பாரற்ற நிலையில் இன்று பதின்நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த காலங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும் காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்து தீர்க்கமான முடிவொன்றை வழங்குமாறும் வலியுறுத்தி, காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் உறுதியான கொள்கையுடன் கறுப்புப்பட்டி அணிந்தவாறு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி நகர கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் என்பன ஒன்றிணைந்து கண்டனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளன.

கிளிநொச்சியில் நகர மத்தியில் உள்ள சித்தி விநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பமான கண்டனப் பேரணி, மாவட்ட செயலகம் வரை சென்றதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்திய ஜனாதிபதிக்கான மகஜர், மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலனிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் வடக்குமாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கான மகஜர் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையிடம் கையளிக்கப்பட்டது.

மகஜர் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலகத்திலிருந்து ஏ9 வீதி வழியாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலுக்குச்சென்று போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும், ஸ்ரீலங்கா அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா காலஅவகாசம் வழங்கக் கூடாது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like