வவுனியாவில் பேரூந்தில் சென்ற பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த இராணுவ வீரர் பொதுமக்களினால் மடக்கி பிடிப்பு

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தில் இன்று (10.07.2018) மதியம் 3.30 மணியளவில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த இரானுவ வீரரை பேரூந்தின் சாரதி மற்றும் பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்த இ.போ.ச பேரூந்தில் பாடசாலை மாணவியோருவர் ( பாடசாலை சீறுடையுடன்) பயணித்துள்ளார். இதன் போது பேரூந்தில் இருந்த இரானுவ வீரர் ஒருவர் குறித்த பாடசாலை மாணவி மீது பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததுடன் தொலைபேசி இலக்கத்தினையும் தருமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து பாடசாலை மாணவி அழுதவாறு பேரூந்தின் நடத்துனரிடம் மேற்குறிப்பிட்ட சம்பவத்தினை தெரிவித்துள்ளார். அதனையடுத்து குறித்த இரானுவ வீரரை தேடிய போது அவர் பேரூந்திலிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

அதனையடுத்து சாரதி மற்றும் பொதுமக்கள் இரானுவ வீரரை மடக்கிப்பிடித்து குருமன்காடு சந்தியடியில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரணில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இரானுவ வீரரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்களும் , பேரூந்தில் பயணத்தினை மேற்கொண்ட பயணிகளும் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவித்து குருமன்காடு பொலிஸ் காவல் அரணை முற்றுகையிட்டனர். இதனால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்தினை சீர் செய்ததுடன் சம்பவம் இடம்பெற்ற இ.போ.ச பேரூந்தினையும் (பயணிகளுடன்) வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள், இளைஞர்கள் குறித்த சிப்பாயை கைது செய்ய வேண்டுமேன தெரிவித்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடினார்கள். இதனால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியிடம் வினாவிய போது,

இரானுவ வீரரை கைது செய்துள்ளோம். தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகளின் பின்னர் இரானுவ வீரரை கைது செய்து வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

You might also like