மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படும் ஜனாதிபதியுடனான சர்ச்சை புகைப்படம் : தீர்வுதான் என்ன..?

காணாமல்போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி, வவுனியா மற்றும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சத்தியாகிரக போராட்டமானது இன்று 12ஆவது நாளாக நீடித்து வருகிற நிலையில், குறித்த போராட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் வவுனியாவில் காணாமல் போன தனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தினை ஏந்தியவாறு தாய் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த தாய் வைத்திருக்கும் புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சிறுவர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எப்போது வெளியாகியதோ, அன்று தொடக்கம் குறித்த தாய் இது தனது பிள்ளை என உரிமை கோரி வருகின்றார். இருப்பினும் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இவ்வாறு கடந்த மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது இவர் தனது கைகளில் ஜனாதிபதிக்கு அருகில் தனது மகள் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், குறைந்தபட்சம் குறித்த சிறுமி பற்றியேனும் ஆராய்ந்து அவரை அவரது தாயுடன் இணைக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்னமும் இவருக்கான தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் அந்த புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினைக் காணமுடிகின்றது.

மேலும் குறித்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

You might also like