ஜனநாயகப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவோரை மக்கள் இனங் காணவேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

ஜனநாயகப் போராட்டங்களை கேவலப்படுத்தி, அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போரை இனங்கண்டு அவர்களை வெளிப்படுத்த வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நேற்றைய தினம் நடாத்திய ஆர்ப்பாட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகின்ற வகையில் நடந்துகொள்வதுடன், அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் எமக்குள் இருந்தே செயற்படுகின்றார்கள். ஆகவே எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விடுத்து இந்த மக்களுக்காக எல்லோரும் ஒருமித்து குரல் கொடுங்கள். அதன் மூலம் தான் இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், சகல அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் இந்த பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நல்லதொரு செய்தி கிடைப்பதற்காக எல்லோரும் அணிதிரண்டு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

You might also like