வவுனியாவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்! முறைப்பாடு செய்யச்சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்

வவுனியாவில் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கு சென்ற தாயாரிடம் பொலிஸார் அலட்சியமாக நடந்துள்ளதுடன், முறைப்பாட்டையும் பதிவு செய்ய மறுத்துள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒலுமடு கிராமத்தில் கடந்த வருடம் பத்து வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானது தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த வருடம் 24.05.2016 அன்று பாடசாலைக்கு மேலதிக வகுப்பிற்கு சென்ற பத்து வயது மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானார்.

குறித்த சிறுமி சந்தேகநபரால் தாக்கப்பட்டதாக வவுனியா நெடுங்கேணி பொலிஸார் குற்றவாளிக்கு சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். அதனடிப்படையில் சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் “தனது மகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக” நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதையடுத்து குறித்த வழக்கில் விசேட கவனம் செலுத்திய நீதிபதி எதிர்வரும் 31.03.2017 மீண்டும் வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் மீண்டும் முறைப்பாடு பதிவு செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

மாவட்ட நீதிமன்றின் நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் முறைப்பாடு பதிவு செய்ய வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு இன்று சென்றிருந்தார்.

இதன்போது குறித்த முறைப்பாட்டை பொலிஸார் ஏற்க மறுத்த நிலையில் தாயாரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார்,

“நீதிமன்றத்தில் நீதிபதியால் எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று (06) நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றிருந்தேன்.

அங்கிருந்த பொலிஸ் அதிகாரி எனது முறைப்பாட்டை ஏற்க மறுத்ததுடன் நீதிமன்றத்திற்கு கோப்பு (File) மாறி சென்றுவிட்டது. அதனால்தான் தவறு நடந்தது.

எங்களிடம் பழைய முறைப்பாடு இருக்கிறது என தெரிவித்ததுடன் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் பொலிஸார் நித்திரைகொள்வதாகவும் அவ்வாறு முறைப்பாடு பதிவு செய்ய வேண்டுமானால் மாலை வரை பொலிஸ் நிலையத்தில் காத்திருக்குமாறும் கூறினார்கள்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

அத்துடன் நீதிமன்றத்தில் கொடுப்பதற்காக பொலிஸ் அதிகாரியின் இலக்கம் மற்றும் பெயரை பதிவுசெய்துள்ளதாகவும் குறித்த தாயார் தெரிவித்தார்.

You might also like