கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 15ஆவது நாளாக தொடர்கிறது

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த உறவுகள் கண்களை கறுப்பு துணியினால் கட்டி தமது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

எமது உறவுகளுக்கு இன்னும் பதிலளிக்காது இந்த அரசு பாரா முகமாக இருக்கின்றது என்பதனைக் காட்டுவதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கறுப்பு துணியால் கண்ணைக்கட்டியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஐ.நா கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தமது போராட்டத்தினை கைவிடப் போவதில்லை எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இப்போராட்டம் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில்ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

You might also like