குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்ட குடும்பஸ்தருக்கு என்ன நடந்தது?

கொழும்பில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு, கன்னியாஸ்திரிகள் முன்னிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முல்லைத்தீவு குடும்பஸ்தருக்கு என்ன நடந்ததென தெரியாமல் வவுனியாவில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான குறித்த குடும்பஸ்தர் கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை முல்லைத்தீவில் இருந்து சுவிஸ் தூதரகத்திற்கு விசா விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ள சென்றுள்ளார்.

விசா விண்ணப்ப படிவத்தினைப் பெற்று தூதரகத்தில் தனது வேலைகளை முடித்துக்கொண்டு தூதரகத்திற்கு வெளியில் வரும் போதே 7ற்கும் மேற்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த குடும்பஸ்தரை சுற்றி வளைத்துள்ளனர்.

அவ்வாறு சுற்றி வளைக்கப்பட்ட வேளையில் குறித்த குடும்பஸ்தர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இருந்து தப்பி சென்று தூதரகத்திற்கு அருகில் இருந்த கன்னியாஸ்திரிகளின் தங்குமிடத்திற்குள் சென்றுள்ளார்.

கன்னியாஸ்திரிகள் மடத்தில் உள்ள பொறுப்பாளர் விசாரித்த போது நடந்த சம்பவத்தினைப் பற்றி தெரியப்படுத்திய போது, கன்னியாஸ்திரி மன்னார் ஆயர் சுவாமி கிங்ஸிபிள்ளைக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மன்னார் ஆயர் கிங்ஸிலிப்பிள்ளை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும், அந்த தகவலை தானே வழங்குவதாகவும் கூறி, 119 இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

விசேட பொலிஸ் குழுவினர் வருகைதந்து நடந்த சம்பவம் பற்றி பொலிஸார் குறித்த குடும்பஸ்தரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் பொலிஸார் வேறு ஒரு பொலிஸ் குழுவிற்கு அறிவித்துள்ளனர். அறிவித்த போது வந்த பொலிஸ் குழுவினர் குறித்த குடும்பஸ்தரை தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு ஏற்றிச்சென்ற குறித்த குடும்பஸ்தர் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியாது குடும்பத்தினர் தடுமாற்றத்துடன் உள்ளதுடன், குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனரா என்றும் தெரியாமல் உள்ளனர்.

இதேவேளை, குறித்த குடும்பஸ்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் குடும்பத்தாருக்கு எதுவித தகவல்களையும் இதுவரையில் வழங்கவில்லை. மன்னார் ஆயர் தற்போது அந்த குடும்பத்தருக்கு என்ன நடந்தென்பது பற்றி சட்டத்தரணி ஊடாக விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதேவேளை, இலங்ககை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாம் விசாரணை செய்ய முடியாதென்றும், மேலதிக விசாரணைகளை செய்வதாயின் இலங்கை மனித உரிமைகள் தலைமைக்காரியாலத்திற்கு சென்று விசாரணைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

கணவர் குறித்த எந்த தகவலும் இன்றி மனைவி தடுமாறிய நிலையில் உள்ளார். பொலிஸார் எந்தவித தகவல்களையும் குடும்பத்தாருக்கு வழங்காமை சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

You might also like