கடன் சுமை அதிகரிப்பால் இரண்டு அதிவேக வீதிகள் அமைக்கும் பணியைக் கைவிட்டது அரசு!

கடன் சுமை அதிகரித்துள்ளமையாலும், கடன் வாங்குவதை குறைத்துக்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளமையாலும் இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியை அரசு இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் மொத்த கடன் தொகை 9500 கோடி அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதால் உள்ளக ரீதியில் அரசு பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல வங்கிகளிடம் இலங்கை அரசு கடன் வாங்குவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்தக் கருத்தால் இலங்கை அரசு முன்னெடுக்க இருந்த இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, கண்டி அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றது. அதனுடன் இணைந்ததாகக் கண்டி – தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதேவேளை, கொழும்பு – இரத்திரனபுரி அதிவேக நெடுஞ்சாலைப் பணியும் விரைவில் ஆரம்பிக்கப்பட இருந்தது. ஆனால், கடன் சுமையைக் குறைத்துக்கொள்ளும் வகையில் இவ்விரு நெடுஞ்சாலைகளையும் அமைக்கும் பணிகளை இடைநிறுத்த அரசு தீர்மானித்துள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டீனாவை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த நிலையில் இவர்களின் பயணமும் இரத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like