மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா, அபின், பாபுல் விற்பனை: புலனாய்வாளர்களை களமிறக்கும் அரசு

கஞ்சா, அபின், போதை மாத்திரை, பாணி மருந்து, பாபுல், ஹான்ஸ், பான்பராக் போன்ற போதைப் பொருட்களுக்கும் மாணவர்கள் சிலர் அடிமையாகியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரத்தில் புத்திக பத்திரன எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புத்திக பத்திரன எம்.பி. தனது கேள்வி நேரத்தில், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதா என்றும், பாடசாலை மட்டத்தில் விற்பனை செய்யப்படுகின்றனவா என்றும், போதைப்பொருள் பாவனையில் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை என்றும், இதனைத்தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இவற்றுக்குப் பதில்களை வழங்கிய அமைச்சர் சாகல ரத்நாயக்க,

“ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுகின்றது என்று எமக்குத் தகவல்கள் கிடைக்கவில்லை.

கஞ்சா, அபின், போதை மாத்திரை, பாணி மருந்து போன்ற போதைப்பொருட்களுக்கு மேலதிகமாக பாபுல், ஹான்ஸ், பான்பராக் போன்ற போதைப்பொருட்களுக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகும் அபாய நிலை காணப்படுகின்றது.

2014 – 2015 காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்காக பாடசாலை வயதிலுள்ள மாணவர்கள் 338 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொதுவான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நகர பாடசாலைகள், மாணவர்கள் அதிகமுள்ள பாடசாலைகள் மற்றும் பிரபல சுற்றுலாத் தளங்களை அண்டியுள்ள பாடசாலைகள் தொடர்பில் நாங்கள் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்.

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் விற்பனை இடம்பெறவில்லை. எனினும், நகரப் பகுதி, சுற்றுலாத் தளங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் இப்படி நடப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே, அதைத் தடுப்பதற்குப் புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த சிவில் பொலிஸாருக்கு மேலதிகமாக புலானாய்வுப் பிரிவையும் தேவையேற்படின் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

You might also like