வவுனியாவில் பாலியல் தொந்தரவு செய்த வைத்தியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!!

வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று (18.06.2018) இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஒருவர் குறித்த தனியார் மருத்துவமனைக்கு தினசரி நோயாளிகள் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழக்கம்.

அதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை எடுத்து சென்ற குறித்த பெண்ணை அந்த மருத்துவமனையின் வைத்தியர் கட்டிப்பிடித்து பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார் என குறித்த பெண் பொலிசில் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து குறித்த பெண் அங்கிருத்து தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனாலும் பயத்தில் இவ்விடயத்தினை வீட்டாருக்கு தெரிவிக்கவில்லை . பின்னர் குறித்த தனியார் மருத்துவமனையின் வைத்தியர் அப் பெண்ணிற்கு குறுந்தகவல் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும்,

அதையடுத்து நேற்று குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியமையடுத்து இரவு 10 மணியளவில் பெற்றோர் அப்பெண்ணை அழைத்துச் சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் தொந்தரவுக்குள்ளாகிய பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்தியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

You might also like