பெண்களே எமக்காகவும் குரல் கொடுங்கள் : வவுனியாவில் ஒப்பாரிப் போராட்டம் – மயங்கி விழுந்த தாய்மார்

சர்வதேச பெண்கள் தினத்திலாவது, பெண்களே எமக்காகவும் குரல் கொடுங்கள் என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஒப்பாரிப் போராட்டம் ஒன்றினை இன்று நடத்தினர்.

கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 13 நாளாகவும், சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் 13 ஆவது நாளாகிய

இன்று தமது போராட்ட இடத்தில் ஒப்பாரி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது தம்மை தாமே கட்டித் தழுவி தமது மனதில் உள்ள ஆதங்களை கூறியபடி ஒப்பாரி வைத்து அழுததுடன், இதனால் அப்பகுதி சோகமயமானது.

அத்துடன், இதன்போது மூன்று தாய்மார் மயங்கி விழுந்தனர். இந்த நிலையில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி,

பங்குனி 8 ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண்கள் தாம் பெற்ற உரிமைக்களுக்காக பெருமைப்படவும், பெற வேண்டிய உரிமைக்காக போராட வேண்டியும் திடசங்கற்பம் பூணும் நாளாக இந்நாள் இருக்கின்றது.

இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, கணவர்களுக்காக, தந்தையர்களுக்காக மற்றும் சகோதாரர்களுக்காக போராட வேண்டிய நிலையில் பெண்களாகிய நாம் உள்ளோம்.

தொடர்ந்து இந்த அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு வரும் நாம் 13 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

உலக பெண்களே, மனித உரிமை அமைப்புக்களே, பெண்கள் அமைப்புக்களே, பொது மக்களே இன்றைய தினத்திலாவது எமக்காக ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.

எமது நியாயமான போராட்டத்தை வலுச் சேர்த்து ஒரு நீதியைப் பெற வாருங்கள் என கண்ணீர் விட்டழுதபடி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like