வவுனியாவில் வன்னி பிரதிபொலிஸ் மா அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு..!!

வன்னி பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வவுனியாவில் இன்று (07.08.2018) பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபரின் சேவையை பாராட்டியும், மதிப்பளிக்கும் முகமாகவும் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

வன்னி பிராந்தி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வன்னி பிராந்தியத்தில் பல மக்கள் நலன் வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்த நிலையில் அதனை பாராட்டும் முகமாகவும், மதிப்பளிக்கும் நிகழ்வாகவும் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள்,வவுனியா வர்த்தகர்கள், கலைஞர்கள், சமூக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள், இணைய ஊடகவியலாளர் சங்கம் ஆகியன வன்னி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தனர்.

கௌரவிப்புக்களை ஏற்றுக்கொண்டதன் பின் உரையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர்,

நாங்கள் சிங்கள பெற்றோருக்கும் நீங்கள் தமிழ் பெற்றோருக்கும் பிறந்த படியால் இனத்தால் வேறுபட்டிருக்கிறோம் மொழி மற்றும் இனம், கலாசாரம் என்பது எமது பெற்றாருடையதாக இருக்கிறது.

கடந்த முப்பது வருடங்களாக நாம் மோதிக்கொண்டோம். நாங்கள் இனியும் இனம் மதம் மொழியால் பிரிந்து இருக்ககூடாது வன்னியில் எவ்வாறு பணியாற்றியுள்ளேன் என நீங்கள் எனக்கு வழங்கிய கௌரவத்தினூடாக அறிந்துகொண்டுள்ளேன் அத்துடன் எனக்கு வடபகுதியில் எதிரிகளோ அச்சுறுத்தலோ இருந்ததில்லை என தெரிவித்தார்.

You might also like