உயிரிழந்த நோயாளி பிணவறையில் உயிருடன் எழுந்த அதிசயம்!

உயிரிழந்த நிலையில் பிணவறைக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீண்டும் உயிருடன் எழுந்த அதிசயம் தியதலாவை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

பொரளை பகுதியை சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு உயிருடன் எழுந்துள்ளார் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், நரம்பு ஒன்று வெடித்தமையினால் ஏற்பட்ட பாதிப்புக்காக சிகிச்சை பெறுவதற்கு தியதலாவை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

தொடர் சிகிச்சைக்கு பின்னர் நேற்று முன்தினம் குறித்த நபர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்த நபரின் சிறுநீரகத்தை வேறு நபருக்கு தானமாக வழங்குமாறு வைத்தியசாலை அதிகாரிகள் உறவினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நோயாளியின் உறவினர் அவர் உயிரிழந்து விட்டதாக அனைவருக்கும் அறிவித்துள்ளனர்.

பின்னர் நேற்று முன் தினம் இரவு முதல் இறுதி அஞ்சலிக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை சிறுநீரகத்தை தானம் வழங்குவதற்கு உறவினர்களின் இணக்கத்திற்கமைய அவரின் உடலம் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.

சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக உடலை பரிசோதித்த சந்தர்ப்பத்தில் அந்த நபர் உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளது. விரைவாக செயற்பட்ட வைத்தியர்கள் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த சம்பவத்தை வைத்தியசாலை மற்றும் நோயாளியின் உறவினர் மறைத்து வருவதாக கொழும்பு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like