வடக்கில் மக்களின் காணிகளுக்குள் இராணுவத்தின் பொழுதுபோக்கு இடங்கள்

வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளில் இராணுவத்தினரின் செயற்பாடானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு, தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தி இவர்கள் தோட்டங்கள் செய்வது மரத்தை வளர்த்து வியாபாரம் செய்வது மட்டுமல்லாமல் அதில் பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்குகின்றார்கள் என இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

30 வருடகால யுத்தம் முடித்து தற்போது 8 வருடங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் தமிழ் மக்களின் சொந்த நிலங்கள் இன்னமும் கையளிக்கப்படவில்லை.

இந்த மக்களின் காணிகளை மீண்டும் வழங்குமாறு கூறினால். நீங்கள் தேசிய பாதுகாப்பு என கூறுகின்றீர்கள் இது எந்த விதத்தில் நியாயம்.

2015 ஆம் ஆண்டு ஐ.நாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மக்களின் காணிகளை விரைவாக அவர்களிடம் கையளிக்கவேண்டும், அதனை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் இவ்வாறு கையகப்படுத்தி வைத்திருக்கும் மக்களின் காணிகளில் பொழுதுபோக்கு இடங்களை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றார்கள்.

ஆனால், அதன் சொந்தக்காரர்கள் வெயில் மழை பாராது வீதியில் உறங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். அத்துடன் அவர்களுடைய காணிகளை விடுவிப்பதற்கு 2 வருட கால அவகாசம் எங்களால் கொடுக்க முடியாது.

உடனடியாக அவர்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

You might also like