கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் சிவாஜிலிங்கம்

ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாதிக்கபட்ட மக்களிற்காக குரல் கொடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்மக்களுடன் வடமாகாண சபை உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், மக்கள் சிவாஜிலிங்கத்திடம் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டுள்ளதுடன் வடமாகாண சபை உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அன்னத்திற்கு வாக்களிக்க கோரப்பட்டது. வாக்குகள் வழங்கப்பட்டன. அன்னம் நீரையும், பாலையும் பிரித்து அருந்துவது போல், தமிழ் மக்களை நீராக கைவிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவிற்கு கால நீடிப்பு வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பிலும், பா.உ சுமந்திரன் மறுத்தமை மூவர் கையொப்பம் இடம்படவில்லை என தெரிவித்த விடயம் தொடர்பில் அவரிடம் வினா எழுப்பப்பட்டது.

இதன்போது, 8 பேர் கையொப்பமிட்டதாகவும், தொடர்ந்து மூவர் கையொப்பம் இடப்படவில்லை என பா.உ சுமந்திரனால் தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் தான் கையொப்பம் இட்டதாக தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

மொத்தமாக 9 பேர் கையொப்பம் இட்டுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், பா உறுப்பினர்களுடனான சந்திப்பில் இவ்விடயம் வலியுறுத்தப்படும்.

இதே வேளை பா உ சுமந்திரன், ஊடகங்கள் வலிந்து மக்களிடம் சில விடயங்களை கூறுமாறு தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோது, யாரும் இவர்களை வலிந்து கேட்கவில்லை.

மேலும், நாம் கேட்பதற்கு மேலாக தமது உள்ளக் குமுறல்களை அவர்கள் வெளிப்புடுத்துவதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

You might also like