யாழ் வைத்தியசாலையில் கடன் அட்டை திருடி மதுபானம் கொள்வனவு..! பொலிஸாரிடம் சிக்கிய 3 இளைஞர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி ஒருவரின் கடன் அட்டையினை திருடிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியை சேர்த்த குறித்த இளைஞர்களே யாழ் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் வருகைதந்து வீடுகளுக்கும், வியாபார நிலையங்களுக்கும் மாபிள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருவருக்கு திடீரென காயம் ஏற்படவே, அவர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சிகிச்சைகள் முடிவுற்ற நிலையில் அங்கு பணி புரிந்த ஆண் தாதியரின் கடன் அட்டையினை திருடியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யவே, இது குறித்த விசாரணைகளின் போது இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மதுபான நிலையங்கள் மற்றும் ஆடைகள் விற்பனை நிலையங்களில் கடன் அட்டையினை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த 3 இளைஞர்களையும் யாழ் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like