வவுனியா வாகனதரிப்பிடத்தில்அதிகூடிய கட்டணம் அறவீடு : நகரசபையில் முறைப்பாடு

வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் அதிகூடிய கட்டணம் அறவிடப்படுவதாக  வவுனியா நகரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறியரக வாகனத்திற்கு ரூபா 30.00, கனரக வாகனத்திற்கு ரூபா 50.00 அறவிடப்படுவது வழமை

இதன் குத்தகை வவுனியா நகரசபையினரால் வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு வழங்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர் சிறியரக வாகனத்திற்கு ரூபா 50.00 அறவிடுவதாகவும் அவ் பற்றுச்சீட்டில் முத்திரை எவையும் காணப்படுவதில்லை எனவும் சில சமயங்களில் சிறியரக வாகனத்திற்கு ரூபா 30.00 (முத்திரை பதித்த) பற்றுச்சீட்டினை விநியோகிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமன் அவர்களிடம் வினாவிய போது,

இவ் வாகன தரிப்பிடத்தில் குத்தகை வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ் விடயம் தொடர்பாக அவர்களிடம் வினாவுவதாக தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்க தலைவர் எஸ்.சுஜன் அவர்களிடம் வினாவிய போது,

சிறிய வாகனத்திற்கு ரூபா 30.00 , பெரிய வாகனங்களிற்கு ரூபா 50.00 அறவிடப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த ஊழியர் மீது விசாரணை நடாத்துவதாக தெரிவித்தார்.

You might also like