படுகாயமடைந்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட கணவன் எங்கே?- மனைவி தர்சினி

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஆனந்தபுரம் சுற்றி வளைப்பின் போது எனது கணவர் படுகாயமடைந்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி இலங்கை வானொலி ஒன்றில் அறிவிக்கப்பட்ட எனது கணவர் எங்கே? என்ன செய்தீர்கள்?

எனது பிள்ளைக்கு அப்பாவை திருப்பி தாருங்கள் என உருக்கமாக தெரிவித்துள்ளார் காணாமல் ஆக்கப்பட்ட மூர்த்தி சந்திரபோஸின் மனைவி தர்சினி.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று  20வது நாளாக இரவு பகலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரபோஸ் – தர்சினி வயது 35 என்பவரே தனது கணவன் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று, நான்காம் திகதி இருக்கும் என நினைக்கிறேன், இலங்கை பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி இலங்கை வானொலி ஒன்றில் எனது கணவரின் விபரங்களை முழுமையாக குறிப்பிட்டு அதாவது புலிகளின் ராதா வான்காப்பு படையின் தாக்குதல் தளபதியான அன்பன் எனப்படும் மூர்த்தி சந்திரபோஸ் என்பவர் ஆனந்தபுரம் சுற்றிவளைப்பு தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார் எனஅறிவிக்கப்பட்டார்.

இதனை வலைஞர்மடத்தில் வைத்து நான் நேரடியாகவே கேட்டேன்.அத்தோடு இந்த சுற்றி வளைப்பில் தளபதிகளான பானு, தீபன், விதுசா, துர்க்கா போன்றோரும் இருந்தாகவும் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார் என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் போராளியான எனது தம்பி குறித்த சுற்றிவளைப்பில் இருந்து தப்பி வெளியேறியவந்து எனது கணவரும் ஆனந்தபுரம் சுற்றிவளைப்பிற்குள் இருந்தார் எனஉறுதிப்படுத்தினான்.

எனவே எனது கணவரின் பெயர், பதவி,உள்ளிட்ட முழுமையான விடயங்களை குறிப்பிட்டு செய்தியறிக்கையில் தெரிவித்தமையானது அவர் இராணுவத்தினரால் கைது செய்யப்படாது நடந்திருக்க வாய்ப்பில்லை.

அவரது விபரங்களை இராணுவம் அவரிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்த தர்சினி பின்னர் நாங்கள் செட்டிக்குளம் வலயம் நான்கு முகாமுக்கு சென்ற போது, அங்குபூசாவில் இருந்து சில இளைஞர்களை பரீட்சை எழுதுவதற்காக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அழைத்து வந்தார்கள். அந்த அதிகாரிகளிடம் எனது கணவரின் புகைப்படத்தை காட்டி வினவிய போது அவர் பூசாவில் இருக்கின்றார், கவலைப்பட வேண்டாம் விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.நானும் பூசா, வெலிக்கடை, நான்காம் மாடி என பல இடங்களுக்கு ஏறி இறங்கி விட்டேன், நான் தேடிச் சென்ற எல்லா இடங்களிலும் இல்லை என்றே கூறி வருகின்றார்கள்.

எனவே பாதுகாப்பு அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட செய்தியில் எனது கணவரின் முழுமையான விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.

அவ்வாறு தெரிவிக்கப்பட்டதகவல்கள் பாதுகாப்பு அமைச்சு எங்கிருந்து பெற்றது? எனது கணவரை தவிர குறித்த அந்த நெருக்கடியான காலத்தில் தகவலை வழங்கியது யார்? படுகாயமடைந்த என் கணவர் எங்கே? பூசாவில் இருப்பதாக புகைப்படத்தை பார்த்து தெரிவிக்கப்பட்ட என் கணவருக்கு என்ன நடந்தது,? என்ற தர்சினியின் கேள்விகளுக்கு பதில் எப்போது கிடைக்கும்?

தயவு செய்து எனது மகனுக்கு அப்பாவை தாருங்கள். நாங்கள் இன்று சமூகத்தில் எல்லா நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றோம்

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தது போன்று எனது கணவரையும் விடுதலை செய்யுங்கள் என வினயமாக கோருகின்றேன் என்றார்.

You might also like