குடியேறும் போது எங்களை கவனிக்காதவர்கள் தற்போது சட்டம் தொடர்பில் பேசுகிறார்கள்: பன்னங்கண்டி போராட்ட மக்கள்

காணி அனுமதிப்பத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்டை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவிக்கையில்,

1990 ஆம் ஆண்டு முதல் மேறபடி கிராமத்தில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

நாங்கள் வாழ்கின்ற இந்த பிரதேசம் பன்னங்கண்டி பசுபதிகமம் என அழைக்கப்படுகிறது. இது இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபராக இருந்த சிவாபசுதி என்பவரின் காணியாகும்.

தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த மக்களில் சிலரை அப்போதே நிர்வாகத்தினர் குறித்த காணிகளில் குடியேற்றினர்.

அக்காலப்பகுதிகளிலேயே எங்களுக்கு கிளிநொச்சியில் அரச காணிகளை சொந்தமாக வழங்கியிருக்க முடியும். ஆனால் அது தொடர்பில் எவரும் அக்கறை கொள்ளவில்லை.

ஆனால் தற்போது அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோர் சட்டப்பிரச்சினையை மாத்திரம் பேசி வருகின்றார்கள். தங்களின் மனிதாபிமான விடயத்தை பற்றி கவனிக்கவில்லை.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு எங்களுக்கு பின்பு வந்து குடியேறியவர்களுக்கு எல்லாம் நிரந்தர காணிகளும், வீட்டுத்திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பன்னங்கண்டி மக்களாகிய நாங்கள் இன்றும் அகதி வாழ்க்கை போன்றே வாழ்ந்து வருகின்றோம்.

எங்களின் பிரச்சினை சட்டரீதியான பிரச்சினை என்றால் இது ஏன் அன்று எங்களை இந்த இடத்தில் குடியேற்றும் போது அதிகாரிகளுக்கு தெரியவில்லையா இது சட்டப் பிரச்சினை, எனவே எங்களின் விடயத்தில் எல்லோரும் அக்கறையின்றியே இருந்து விட்டனர்.

எனவே தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில்லாவது அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

 

 

You might also like