வவுனியா – சுந்தரபுரம் தனியார் பேரூந்து சேவை சீரின்மையினால் மக்கள் அசோகரியம்

வவுனியாவிலிருந்து சுந்தரபுரம் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் சீரான முறையில் சேவையில் ஈடுபடுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து சுந்தரபுரம் நோக்கி மாலை 6.30 மணிக்கு பயணிக்கும் தனியார் பேரூந்து 5.45 மணிக்கே புதிய பேரூந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு இலுப்பையடிசந்திக்கு சென்று அங்கு தரித்து நிற்பதால் தாம் பல்வேறு அசோகரியங்களுக்கு உள்ளாவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு சென்றால் அங்கு பேரூந்து தரித்து நிற்பதில்லை பின்னர் அங்கிருந்து இலுப்பையடிசந்திக்கு நடந்து சென்றே தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் உரிய அதிகாரிகள் இவ் விடயத்தில் தலையிட்டு தீர்வினை பெற்றுத்தருமாறும் இல்லாவிடின் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை சேவைக்குட்படுத்துமாறு பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக இன்றைய தினம் 5.40 மணியளவில் புதிய பேரூந்து நிலையத்திற்கு நேரடியாக சென்று எமது செய்தியாளர் பார்வையிட்ட சமயத்தில் பேரூந்து தரிப்பிடத்தில் நிற்கவில்லை . அங்கு கடமையில் நின்ற தனியார் நேரக்கணிப்பாளரிடம் இது தொடர்பாக வினாவிய சமயத்தில்,

வழமையாகவே இங்கு சில பேரூந்துகள் தரித்து நிற்பதில்லை .பல தடவைகள் அவர்களது வழி அனுமதிப்பத்திரத்தினை பறிமுதல் செய்த போதிலும் அவர்கள் புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து நிற்பதில்லை . பொதுமக்கள் முறைப்பாட்டினை கடிதம் மூலமாக தரும்பட்சத்தில் மேல் இடங்களுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.

வவுனியா – சுந்தரபுரம் சேவையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் ஏன் சேவையில் ஈடுபடுவதில்லை என இ.போ.ச வவுனியா சாலை முகாமையாளரிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது,

தற்போது எமது சாலைக்கு புதிதாக ஆறு நடத்துனர்கள் , ஆறு சாரதிகள் இணைந்துள்ளனர். எம்மிடம் போதிய ஆளனி காணப்படுகின்றது. ஆனால் பேரூந்துகள் இன்மையின்மையினால் எமக்கு கிராமபுறங்களுக்கு சேவையில் ஈடுபட முடிவதில்லை புதிய பேரூந்துகள் எமக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் சுந்தரபுரம் , மடு , அரபாநகர் போன்ற பகுதிகளுக்கு எமது சேவைகள் இடம்பெறுமேன தெரிவித்தார்.

நேரக்காணிப்பாளரின் கருத்தினை செவிமடுக்காது செல்லும் தனியார் பேரூந்துகள்? வவுனியாவிலிருந்து வெளி மாவட்டத்திற்கு தினசரி பல இ.போ.ச பேரூந்துகள் சேவைகளில் ஈடுபடுகின்றன. இலாப நோக்குடனா இயங்குகின்றது இ.போ.ச பேரூந்துகள்? கிராமபுற மக்களை அரச பேரூந்து புறக்கணிப்பது ஏன்?

 

You might also like