முல்லைத்தீவில் பிள்ளைகளை தொலைத்த தாய்…வீதி வழியே தேடி அலையும் நிலை..!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இன்றும் தொடர்கின்றது.

இந்த நிலையில் புதுகுடியிருப்பு 7ம் வட்டாரத்தில் வசிக்கும் தாய் ஒருவர் நீண்டதூரம் நடந்து சென்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த தாய் முல்லைத்தீவு பிரதான வீதி வழியே ஊன்று கோலின் உதவியுடன் பொடி நடையாக நடந்து சென்றுள்ளார்.

செல்லும் போது இடையிடையே தனக்கு உதவுவதற்கு தன் பிள்ளைகளை தேடியிருக்கின்றார்.

அதாவது தனக்கு உதவ யாராவது ஒருவர் முன்வருவார்களா என்று வீதியில் நிற்பதும் அங்குமிங்கும் பார்ப்பதும் பின்னர் போவதுமாக காணப்பட்டார்.

அப்பொழுது அவ்வழியே மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவன் குறித்த தாயை வழிமறிதுள்ளார்.

நீங்கள் நீண்டதூரம் நடந்து செல்வது போலிருக்கின்றது. உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு உதவ மாட்டார்களா என்று அந்த இளைஞன் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த தாய், நான் என்னுடைய பிள்ளைகளை தேடித்தான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது கைப் பையில் வைத்திருந்த தன் காணமல்போன பிள்ளைகளின் புகைப்படங்களை அந்த இளைஞனுக்கு காண்பித்து இவர்களை நீ எங்காவது கண்டணியா தம்பி என்று கேட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டும் முல்லைத்தீவு போராட்டத்தில் குறித்த தாய் தற்பொழுது கலந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like