கேப்பாபுலவு போராட்டத்தில் பதற்றம் : வீதியில் மயங்கி சரிந்த பெண் ; ஆத்திரமடைந்த மக்களில் ஒருவர் இராணுவத்தின் தடாகத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி.!

கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது வீடுகளையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விட்டு வெளியேற வேண்டுமென தெரிவித்து இன்றுடன் 12ஆவது நாளாக தொடர் போராட்டத்தினையும் 2ஆவது நாளாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினையும் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயில் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றையதினம் நண்பகல் 12மணியளவில் தமது உறவுகள் நீராகாரம் எதுவுமின்றி தமது சொந்த நிலத்தை கேட்டு வீதியில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவமோ அரசோ அதைப்பற்றி கருத்திலெடுக்காது செயற்பட்டுவருவதாகவும் இதனால் தாம் ஆத்திரமடைந்துள்ளதாகவும் என தெரிவித்து இராணுவம் தமது நிலத்தை விட்டு வெளியேறுமாறு கூறி இராணுவத்தலைமையக வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்படடத்தின்போது பெண்ணொருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்தநிலையில் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்ட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மக்களில் ஒருவர் இராணுவத்தலைமையக வாயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள ஆழம்கூடிய நீர்த்தொட்டியில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனே அருகிலிருந்த மக்கள் அவரை உடனடியாக காப்பாற்றி வெளியே எடுத்தனர். இதனால் பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது இதனை தொடர்ந்து மக்கள் ஆத்திரமடைந்தவர்களாய் இராணுவத்தை கண்டபடி திட்டி தீர்த்தத்தையும் அவதானிக்க முடிந்தது.

 

You might also like