கிளிநொச்சி சிவபாதகலையகம் அ.த.க பாடசாலை மாணவர்களது பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்?

நகர்ப்புற பாடசாலைகளின் அபிவிருத்தியில் மாத்திரம் அக்கறை செலுத்தாது தமது பாடசாலை குறித்தும் அக்கறை செலுத்துமாறு கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் பல்வேறு பெயரில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பாடசாலைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இதுவரை அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், மாணவர்கள் உட்பட பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்டன.

இதன்பின்னர் மீண்டும் 2010 ஆம் ஆண்டு மக்கள் மீளக்குடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து கல்விச் செயற்பாடுகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன.

இதனடிப்படையில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை யுத்தத்தின் பின்னர் 2010 ஆம் ஆண்டு மீள ஆரம்பிக்கப்பட்டது.

பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பௌதீக வளங்கள் உட்பட இதுவரை எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த பாடசாலையில், சுமார் 500 மாணவர்கள் கல்வி கற்றுவருவதுடன் 22 ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை உள்ள இந்தப் பாடசாலை குறித்து கிளிநொச்சி மாவட்ட கல்வித் திணைக்களம் உட்பட கல்வி அதிகாரிகள் எவரும் கவனம் செலுத்துவதில்லை என்று ஆதங்கம் வெளியிட்டுள்ள பாடசாலையின் அதிபர் திருமதி பரமேஸ்வரி சோதிலிங்கம், தமது பாடசாலை குறித்தும் அக்கறை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை பாடசாலைக்கு சென்றுவருவதற்கான பாதை அபாயகரமானதாக உள்ள காரணத்தால் தமது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக மாணவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதுமாத்திரமன்றி கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்று கவலை வெளியிட்டுள்ள மாணவர்கள், நகர்ப்புற பாடசாலைகளிலிருந்து தமது பாடசாலை புறக்கணிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

You might also like