வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உயர் மின்பொறி இயந்திரம் இராணுவத்தினரிடம் இருந்து மீட்பு

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான உயர் மின்பொறி இயந்திரம் (Electrical Power Generator) ஒன்று இராணுவத்தினரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயர் மின்பொறி இயந்திரம் 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்தின் போது ஆலயத்தில் இருந்த நிலையில் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் தமது சொந்தக் காணிகளை இராணுவத்தினர் உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிந்தனர்.

இதன் விளைவாக அந்த கிராமத்து மக்களின் காணிகளில் (7.75 ஏக்கர்) ஒருபகுதியினை இம்மாதம் 4 ஆம் திகதி இராணுவத்தினர் கையளித்துள்ள நிலையில் இராணுவத்தினரின் மின் இயந்திர அறைப்பகுதியினை 4ஆம் திகதி வரை உடனடியாக மாற்ற முடியாத சூழல் இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் அவர்கள் சில நாட்களின் பின்னர், அதாவது பொதுமக்கள் மீள்குடியேறிய பின்னரே இராணுவத்தினர் மின் உபகரணங்கனை அங்கிந்து இடம்மாற்ற முயற்சித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த அறையில் காணப்பட்ட மின்பொறி இயந்திரங்களில் ஒன்று கண்ணகி அம்மன் கோயில் வற்றாப்பளை என்று எழுதப்பட்டுள்ளதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகத்திற்கு அவர்கள் தகவல் அனுப்பியுள்ளதுடன், இதன் பின்னர் அங்கு சென்ற ஆலய நிர்வாக உறுப்பினர்கள் இராணுவத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி குறித்த உயர் மின்பொறி இயந்திரத்தை மீட்டுள்ளனர்.

You might also like