புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ். மாவட்டத்திற்கு ஏற்பட்ட சோகம்….

வறுமைக்கோட்டுக்குள் உள்வாங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

குறித்த தரவுகளின் படி, ஆகக் கூடிய தனிநபர் வருமானம் பெறும் மாவட்டமாக கொழும்பு மாவட்டம் பெயரிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் தனிநபர் ஒருவரின் வருமானம் 4396 ரூபா காணப்படுகின்றது.

கொழும்புக்கு அடுத்தபடியாக கம்பஹா, களுத்துறை, மாத்தளை, நுவரெலிய, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, கேகாலை, ஆகிய மாவட்டங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாவட்டங்களாக கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை, குருணாகல் ஆகிய மாவட்டங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

இவற்றுடன், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகல, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் வறுமைக்கோட்டுக்குள் உள்ளவாங்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தனிநபர் வருமானமாக 4,169 ரூபாவாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தனிநபர் வருமானமாக 4,183 ரூபாவாகவும் அமைந்துள்ளது.

வறுமைக்கோட்டு எல்லையைத் தீர்மானிக்கும், தனிநபர் ஒருவருக்கான மாத வருமான எல்லை, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 4,207 ரூபாவாக காணப்பட்டது. எனினும், இந்த தொகை பெப்ரவரி மாதம், 4,229 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 4,229 ரூபாவுக்கு கீழ் தனி நபர் ஒருவரின் மாத வருமானங்கள் உள்ள மாவட்டங்கள், வறுமைக்கோட்டுக்குட்பட்டவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 8 மாவட்டங்களில் இரண்டு மாத்திரமே வறுமைக்கோட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like