அதிக வட்டிக்கு வழங்கப்பட்டு வரும் கடன்களால் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மிகவும் பின் தங்கிய கிராமங்களை இலக்கு வைத்து குத்தகைக் கம்பனிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் அதிக வட்டிக்கு வழங்கப்பட்டு வரும் கடன்களால் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து, வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறியுள்ள மக்கள் தமது அன்றாட வாழ்வியலுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் வங்கிக்கடன்களை விட மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட 46 வரையான நிதி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 30 வரையான நிதி நிறுவனங்கள் வடக்கில் குறிப்பாக மீள்குடியேற்ற பிரதேசங்களில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்து வருகின்றன.

இதனைவிட வட்டிக்குப்பணம் கொடுப்பவர்கள் அடைகு பிடிப்பவர்கள் என பல்வேறு கொடுக்கல் வாங்கல்களைச் செய்யும் தனியார் நிதி நிறுவனங்களும் தனியாரும் வடக்கிலேயே செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிதி நிறுவனங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் எல்லையோரக் கிராமங்களை இலக்கு வைத்து மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் மிகவும் குடும்ப வருமானம் குறைந்த குடும்பங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இவ்வாறான அதிவட்டி கூடிய கடன்களை வழங்கி அதனை அறவிட்டு வருகின்றன.

இதனால் கடன்களை பெற்றுக்கொண்டவர்கள் அதனை வாராந்தம் செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக இவ்வாறான கடன்களால் குடும்பங்களிடைய குடும்பப்பிணக்குகள் இடம்பெற்று வருகின்றன. இதனைவிட தற்கொலைகள் கூட இடம்பெற்றுள்ளன.

அதாவது வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அண்மையில் தாய் ஒருவர் தானும் தனது குழந்தையையும் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டமை மற்றும் முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டமை என்பவற்றின் பின்னணியில் இவ்வாறான கடன்களே காணப்பட்டன.

எனவே பல்வேறு விழிப்புணர்வுகள் வதிவிடப்பயிற்சிகள் என அதிகளவில் பணத்தை செலவிடும் அரசமற்றும் அர சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறான கடன்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி மக்களைத் தெளிவூட்ட வேண்டும் எனவும் இவ்வாறான கடன்களில் அதிகளவில் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். இதனை அனைத்து தரப்புக்களும் கவனத்தில் கொள்ளவேண்டுமெனவும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like