ஏன் எங்களின் விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை..? பன்னங்கண்டி பகுதியில் ஓங்கி ஒலித்த குரல்

நாங்கள் கடந்த காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட வன் செயல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியமர்ந்துள்ளோம். இன்று வரை எங்களுக்கு நிரந்தர காணி வழங்கப்படவில்லை என பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கள் கிழமை பத்தாவது நாளாக தொடர்கிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த போது,

நாங்கள் கிளிநொச்சிக்கு வந்த காலத்தில் இங்கு அதிகளவான அரச காணிகள் இருந்தன. அங்கு எங்களை குடியமர்த்தியிருக்கலாம். ஆனால் அதனையும் செய்யவில்லை.

நாங்கள் தற்போது காணியற்ற மக்களாக சொந்த இடத்தில் அகதியாக வாழ்கின்றோம். ஏன் நாங்கள் மலையகத்தில் இருந்த ஏழைகள் என்பதால் எங்களின் விடயத்தில் அக்கறையின்றி இருக்கின்றீர்களா..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, காணி அனுமதி பத்திரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர்.

இந்த மக்கள் 1990ஆம் ஆண்டு முதல் மேற்படி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் வாழ்கின்ற பிரதேசம் பன்னங்கண்டி பசுபதிகமம் என அழைக்கப்படுகிறது.

இது இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபராக இருந்த சிவாபசுபதி என்பவரின் காணியாகும். தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த மக்களில் சிலரை குறித்த காணிகளில் குடியேற்றியுள்ளனர் அப்போதே நிர்வாகத்தினர்.

ஆனால் இன்று வரை இந்த மக்களுக்கு சொந்தமாக காணியோ, மற்றும் வீட்டுத்திட்டங்களோ, அல்லது அரசின் ஏனைய எந்த உதவித் திட்டங்களும் இன்றி மிக மிக மோசமான நிலையில் வாழ்கின்றனர்.

அகதி முகாம் வாழ்க்கையை விட மோசமான வாழ்க்கை வாழ்வதாக இந்த மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்ற போதும் எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் காலங்களில் வீடு வீடாக வரும் அரசியல் தரப்புக்கள் தாங்கள் தெருவில் இறங்கி பத்து நாளாக போராடுகின்ற போது வெறுமனே வந்து பார்த்துவிட்டு தேர்தல் நேரங்களில் வழங்கும் வாக்குறுதிகள் போன்று வழங்கிவிட்டு சென்றுவிட்டார்களே

தவிர அவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்களா என்பது பெரும் சந்தேகத்திற்குரியது எனத் தெரிவித்தனர்.

You might also like