பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபரினால் வவுனியா இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

வவுனியா இலங்கை போக்குவரத்து சபையினரினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (18.09.2018) காலை 5.30மணியளவில் கைவிடப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று முன் தினம் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்தின் நடத்துனர் ,சாரதி மற்றும் பேரூந்தின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இவ் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பேரூந்து நடத்துனர் எஸ்.தயாபரன் (வயது 28) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்தனர்.

எனினும் தனியார் பேரூந்தின் உரிமையாளரினை கைது செய்யுமாறு கோரியும் வவுனியா புதிய பேரூந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு பாதுகாப்பில்லை , தூர சேவை பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப்புறக்கணிப்பினை நேற்றைய தினம் (17.09.2018) இ.போ.சபையின் வவுனியா , முல்லைத்தீவு , களவாஞ்சிக்குடி ஆகிய சாலைகள் ஈடுபட்டிருந்தன.

தனியார் பேரூந்தின் நடத்துனர் , சாரதியினை நேற்றையதினம் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய போது எதிர்வரும் 01.10.2018 வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந் நிலையில் நேற்றையதினம் இ.போ.சாலைக்கு வவுனியா , மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களின் தலமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டு ஊழியர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.

பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் விரைவில் தனியார் பேரூந்தின் உரிமையாளரை கைது செய்வதாக வவுனியா , மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரம தெரிவித்திருந்தார்.  கைது செய்யும் வரை தாங்கள் பணிப்புறக்கணிப்பினை தொடர்வதாக  ஊழியர்கள்  தெரிவித்தனர்.

இந் நிலையில் குறித்த தனியார் பேரூந்தின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம் சரனடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக நாங்கள் பணிக்கு திரும்புவதாகவும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பணிப்புறக்கணிப்பினை தொடர்வதாகவும் இ.போ.சபையின் இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

You might also like