வவுனியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேறுமாறு அவசர அறிவித்தல்

வவுனியா இராசேந்திரன்குளம் வன இலகாப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காணி அபகரித்து குடியேறியுள்ளவர்களில் 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மத்திய கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவசரக்கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில்  இடம்பெற்றுள்ளது.

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் வனத்திணைக்களத்திற்கு உரித்தான ஒதுக்கு காடு 1921 ஆம் ஆண்டு ஓதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. அதில் 3500 ஏக்கர் விக்ஸ்காடு, பாவற்குளம் போன்ற பகுதிகளில் வன இலகா பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சூடுவெந்தபிலவு பகுதியில் சொற்ப நிலமே வன இலகாவினரின் கட்டுப்பாட்டிலிருந்து வருகின்றது. இதில் 50 ஹெக்டேர் விடுவிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகள் இரண்டு பிரதேச செயலகப்பிரிவுகளுக்குள் வருகின்றன.

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிற்கும், வவுனியா பிரதேச செயலகப்பிரிவிற்கும் என இரண்டு பிரதேச செயலகப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. சூடுவெந்தபிலவு பகுதியில்  கடந்த வருடம் தேக்க மரம் நாட்டுவதற்குச்சென்ற வன இலகாவினரை அப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் அனுமதிக்கவில்லை.

பாவற்குளம் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள 6ஆம் கட்ட வீட்டுத்திட்டம் பகுதியில் விவசாயம் மேற்கொள்வதற்காகத் தெரிவித்து சட்டவிரோதமான முறையில் வன இலகாவினரின் பகுதியில் குடியேறியுள்ள 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு கொழும்பு, பத்தரமுல்ல வனப் பாதுகாவல் ஆணையாளர் நாயகத்தினால்  கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு அவரின் உதவியை நாடியுள்ளனர். அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட  அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்ற அவசரக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட  அரசாங்க அதிபர், உதவி  மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட வன உத்தியோகத்தர், உதவி மாவட்ட வன உத்தியோகத்தர், வவுனியா வட்ட வன உத்தியோகத்தர், வவுனியா, வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளர்கள், மாவட்ட கமநல உதவி ஆணையாளர், ஆகியோர் கலந்துகொண்டதுடன் அப்பகுதியை விடுவிப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகளுக்கு அமைச்சரினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்  4ஆம்  திகதி அப்பகுதியைச் சென்று பார்வையிட்டு களப்பரிசோதனை செய்வதற்கு விஷேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு காட்டுப்பிரதேசமாக காணப்பட்டு தற்போது காடுகள் அழிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து வனத்திணைக்களத்திற்கு அச்சுறுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வனத்திணைக்களத்திற்கு அமைச்சராக ஜனாதிபதியே காணப்படுகின்றார் இலங்கையில் 32 வீதாசாரத்தில் நிலப்பகுதிகளில் காடுகளை அதிகரிப்தற்கு பிரயச்சித்தம்  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமைக்கு ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் இராசேந்திரன்குளம் பகுதியிலுள்ள பொதுக்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like