கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு தென்னிலங்கை அமைப்பு ஆதரவு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 23வது நாளாகவும் தொடர்கின்றது.
இந்நிலையில் தென்னிலங்கையில் இருந்து செயற்படுகின்ற சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு இந்த போராட்டத்திற்கான தமது ஆதரவினை வழங்கியுள்ளது.
அத்துடன், சம உரிமை இயக்கம் மற்றும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பனவும், குறித்த போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கும் முகமாக கந்தசாமி கோவில் முன்றலில் 23 வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
இதன்போது சமத்துவம், சமூக நீதிக்காண மக்கள் அமைப்பு சார்பில் கருத்து தெரிவித்த மு.பா உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் குறிப்பிடுகையில்,
இன்றைய தினம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் ஈடுபட்டுள்ளோம். நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசு இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் நலன் தொடர்பில் திரும்பி பார்க்கவில்லை.
இன்றைய தினம் மக்கள் ஆதங்கங்களை வெளியிடுகின்றனர். நுளம்புகளிற்குள்ளும், கடும் குளிர் வெப்பத்திற்குள்ளும் எமது பிள்ளைகளிற்காக காத்திருக்கின்றோம் என தெரிவிக்கின்றனர்.
தற்போது தமிழ் தலைமைகள் அரசுக்கு 2 வருடங்கள் கால அவகாசம் வழங்குவதாக ஊடகங்களிலும், அவர்களாலும் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி எந்த காரணம் கொண்டும் இராணுவத்தினரை விசாரிக்க அனுமதிக்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்த பின்பும், கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவரகள் ஈபிடிபியினரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர், தற்போது நீங்கள் அந்த கட்சியில் இல்லை.இந்நிலையில் அது தொடர்பிலான தகவல்கள் ஏதாவது வெளியிட முடியுமா என ஊடகவியலாளர்ஒருவர் வினவியதற்கு,
கடந்த காலங்களில் ஈபிடிபியினர் மீது மட்டுமல்ல பல குழுக்கள் மீது குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஈபிடிபி உறுப்பினர்கள் அவ்வாறு குற்றச்சட்டு முன்வைக்கப்பட்டு சிலர் மீது தற்போது வழக்கு தொடுக்கப்பட்டும் உள்ளது.
எனவே எந்த அமைப்பினர் மீதும் உண்மையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அது நிரூபிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை தானும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த அரசின் காலத்தில் இவ்வாறு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளை பாதிக்கப்பட்ட மக்களிற்காக என்ன விடயத்தினை கையான்டீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களிற்காக பாராளுமன்றில் என்னால் பேசப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.