சர்ச்சையை ஏற்படுத்தும் கர்ப்பிணி பெண் படுகொலை : அன்று இல்லாத தடயங்கள் இன்று பொலிஸாரிடம்

ஊர்காவற்துறையில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் அன்று இல்லாத தடயப் பொருட்கள் இன்று பொலிஸாரிடம் காணப்படுவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கானது ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் , இரண்டவாது சந்தேக நபரின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு எடுப்பதற்கு பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்தனர்.

அதன் போது சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இரத்த மாதிரிகளை எடுப்பதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று இரத்தமாதிரிகளை எடுக்க நீதிபதி பணித்தார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதலாவது சந்தேக நபரின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த தவனைகளின் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து தடயங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என பொலிஸார் மன்றில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது உடல்கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட சில தடய பொருட்கள் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளதாக சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் சுட்டிகாட்டினார்.

You might also like