இலங்கையிலும் உணவுப் பிரச்சினை : 9 இலட்சம் மக்கள் பாதிப்பு.!

இலங்கையில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக 9 இலட்சம் பேர் உணவுப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது என்று ராய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அரசாங்க நிறுவனங்களும் நிவாரண அமைப்புக்களும் அண்மையில் மேற்கொண்ட இதுவரை வெளியிடப்படாத புள்ளிவிபர கணக்கீட்டில் உணவு பாதுகாப்பு பிரச்சினை அதிகரித்து செல்வதாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இதேவேளை, கடந்த 40 வருடங்களில் இலங்கை மிகவும் மோசமான வரட்சியை எதிர்கொண்டுள்ளதாகவும் நெல் அறுவடை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாகவும் சேவ் த சில்ட்ரன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் 60 வீதமானவர்களின் வருமானம் அரைவாசியிலும் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபர கணக்கெடுப்புக்களின் அறிக்கைகள் இம்மாத இறுதியில் முறையாக தெரிவிக்கப்படு மென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரட்சி காரணமாக நாட்டில் 1.2 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 இலட்சம் பேர் சிறுபிள்ளைகள் எனவும் தெரிவிக்கப்படுவதாக ராய்ட்டர் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மற்றும் மேல் மாகாணங்கள் வரட்சியினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 இலட்சம் பேர் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.