வவுனியா வர்த்தகர் சங்கத்தின் செயற்பாட்டினால் மகிழ்ச்சியில் ஏழைக்குடும்பம்

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்ட வவுனியா சிவபுரம் அரசினர் தமிழக்கலவன் பாடசாலை மாணவி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜா 197 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து இன்று பிற்பகல் மாணவியின் வீட்டிற்குச் சென்ற வவுனியா வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் குறித்த மாணவியின் கல்வி நடவடிக்கையினை, உயர் கல்வியைத் தொடர்வதற்கும் தொடர்ந்து முற்று முழுதான நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் தெரிவிக்கும்போது,

வவுனியா மாவட்டத்தில் 197 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ள வவுனியா சிவபுரம் மாணவி செல்வி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜாவினால் வவுனியா மாவட்டத்திற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் வர்த்தக சங்கப்பிரதிநிதிகளாகிய நாங்களும் மகிழ்வடைகின்றோம். வர்த்தகர் சங்கமாகிய நாங்கள்  இம் மாணியின் உயர் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கி பொறுப்பேற்றுக்கொள்கின்றோம்.

தொடர்ந்தும் குறித்த மாணவி தனது கல்வியை தடையின்றி தொடர்ந்து மேற்கொண்டு எமது மாவட்டத்திற்கும் எமது தாய் நாட்டிற்கும் சேவையாற்ற முன்வரவேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம். என்று மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை குறித்த பாடசாலையில் 165 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட செல்வக்குமார் டிலானி மாணவியின் வீட்டிற்குச் சென்று மாணவியின் கற்றல் நடவடிக்கைத் தேவைகளுக்கு வர்த்தகப்பிரதிநிதிகள் பண உதவிகளையும் வழங்கி வைத்தனர்.

வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை வசதியற்ற மாணவர்களே கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். 50 மாணவர்களைக்கொண்டுள்ள பாடசாலையிலிருந்து குறித்த மாணவி தேசிய ரீதியில் மூன்றாமிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like