கிளிநொச்சியில் பெண்ணை இழுத்துச்சென்று கழுத்தில் வெட்டிய சம்பவம் : அடையாள அணிவகுப்பு இடைநிறுத்தம்

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட வழக்கின் அடையாள அணிவகுப்பு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது அடையாள அணிவகுப்பை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைக்கு நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அனுமதி வழங்கியுள்ளார்.

சாந்தபுரம் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 56 வயதான பெண் ஒருவர் மீது இராணுவத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் கூரான ஆயுதமொன்றினால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று அவரது கழுத்துப் பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்திவிட்டு சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like