தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள்! வைரமுத்து முதல் நானா படகேர் வரை: அம்பலமாகும் தகவல்கள்

உலகம் முழுவதும் எந்தத் துறையாக இருந்தாலும், அதில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால், ஆண்களை காட்டிலும் சற்று தீவிரமாக இருக்க வேண்டியிருக்கும்.

பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதிகமே. பல இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தாக்குதல்களை எல்லாம் தாண்டிதான் வேலை செய்ய வேண்டியுள்ளது.

ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர்.

இந்தியாவில் இந்த #MeToo எழுச்சி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த பாலியல் புகாரில் இந்தியாவின் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.

ஆரம்பத்தில், ஸ்ரீரெட்டி ஆரம்பித்த இந்த புகார் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன்பின்னர், தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட நடிகைகள், தங்களிடம் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

அதுவும், நடிகை தனுஸ்ரீ தத்தா, தேசிய விருது வாங்கி சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்துடன் வலம் வரும் நடிகர் நானா படேகர் மீது குற்றம்சுமத்தினார். 2010 ஆம் ஆண்டு தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதான பொலிசில் புகார் அளித்துள்ளதையடுத்து, நானா படேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பெண் பத்திரிகையாளரான சந்தியா மேனன், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஹைத்திராபாத் பதிப்பின் ஆசிரியரான ஸ்ரீனிவாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஸ்ரீனிவாஸ் அளித்துள்ள பதிலில், பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டி நடத்திவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்

அதே போல ஹஃபிங்ட்ன் போஸ்டில் பணிபுரிந்த அனுராக் வர்மா மீதும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அவர் ஸ்னாப்சாட்டில் தவறான விதத்தில் மெசேஜ்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள அனுராக் வர்மா, தான் விளையாட்டாகவே அந்த மெசேஜ்களை அனுப்பியதாக கூறியுள்ளார்.

இவர்களை தொடர்ந்து மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது இந்த #MeToo எழுச்சி இந்தியாவின் பாலியல் சுனாமியாக உருவெடுத்துள்ளது.

மேலும், பல்வேறு பிரபலங்கள் இதில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like