வவுனியா ஒமந்தையில் போதை மாத்திரை பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவர் பொலிசாரால் கைது

வவுனியா, ஓமந்தை பொலிசாரின் விசேட நடவடிக்கையின் காரணமாக போதை மாத்திரை பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட இரு இளைஞர்களை ஓமந்தைப் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டாயிரத்து 600 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த இருவரும் ஓமந்தைப் பொலிசாரால் ஏ9 வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக்கிழமை ஆயிரத்து 670 போதை மாத்திரைகளுடன் யாழில் இருந்து திருகோணமலை சென்ற இரு இளைஞர்களை ஓமந்தைப் பொலிசார் கைது செய்திருந்தனர். அவர்களை நீதிமன்றில் முற்படுத்தி, மேலதிக விசாரணைக்காக அவர்களை ஓமந்தைப் பொலிசார் தமது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை காரணமாக சொகுசு கார் ஒன்றில் யாழில் இருந்து இரண்டாயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் ஏ9 வீதியில் பயணித்த பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவரை ஓமந்தைப் பகுதியில் வைத்து பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.

வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அபய விக்கிரம அவர்களின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எஸ்.எம்.தென்னக்கோன் அவர்களின் நெறிப்படுத்தலில் ஒமந்தை பொலிசிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தலைமையிலான பொலிசாரே இவ் விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.

குறித்த இரு இளைஞர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சொகுசு காரும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த ஓமந்தை பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 34 மற்றும் 23 வயதுடைய யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

You might also like