வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

வவுனியா நெடுங்கேணி பழையமாமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று (18) காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த வியாழக்கிழமையிலிருந்து ஜெயபாலன் தர்மசீலன் (34வயது) என்பவரை காணவில்லை என்று உறவினர்கள் தேடியுள்ளனர்.

எனினும் வேலைகளுக்குச் சென்றிருப்பதாகவும் விரைவில் வருவார் எனவும் உறவினர்கள் எண்ணியுள்ளனர்.

இதேவேளை நேற்றும் குறித்த நபர் வீடு வராததையடுத்து மேலும் தேடுதலை மேற்கொண்டபோது நேற்று மாலை கிணற்றிற்குள் குறித்த நபரின் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், வவுனியா பொது வைத்தியசாலையில் சடலத்தினை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் திருமணமாகி மனைவி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஒரு பிள்ளையுடன் வசித்து வருவதாகவும், இருவருக்கிடையே கருத்து முரண்பாடு காரணமாக சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like