‘அம்மா நான் போக மாட்டேன்’ கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுவனின் ஏக்கம் : தாய் வாக்குமூலம்

கணவன் என்னை விட்டுச்சென்ற நிலையில் மகனை வளர்க்க முடியாமல் ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தேன், ஆனால் அவன் இறந்து விட்டான் என நாவற்குடாவில் அடித்து கொலை செய்யப்பட்ட சிறுவனின் உண்மையான தாயார் வாக்குமூலமளித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, நாவற்குடாவில் சிறுவன் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் குறித்த சிறுவனின் வளர்ப்புத்தாய் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது உண்மையான தாயையும் கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“எனது மகன் வயிற்றிலிருக்கும் போதே எனது கணவர் என்னை விட்டுப்பிரிந்து மறுமணம் புரிந்து கொண்டார்.

என்னுடன் எனது உறவினர்களும் பேசுவது கிடையாது. எனது வறுமை நிலையின் காரணமாக மகனை வளர்க்க முடியாமல் சிரமங்களுக்கு முகம் கொடுத்தேன்.

இந்த நிலையில் தான் நாவற்குடாவைச் செர்ந்த பெண் ஒருவர் எனக்கு அறிமுகமானார். என்னுடைய வறுமை நிலையை உணர்ந்துகொண்ட குறித்த பெண் எனக்கு உதவுவதற்கு முன்வந்தார்.

எனது மகனை வளர்ப்பதாகவும், பணம் எதுவும் வேண்டாம் என்றும் எனக்கு கூறினார். இதையடுத்து எனது மகனை 2016.11.31 அன்று அவரிடம் ஒப்படைத்தேன்.

“அம்மா நான் போக மாட்டேன், உங்களுடனே இருக்கின்றேன்” என எனது மகன் பல முறை என்னிடம் தெரிவித்திருந்தான்.

ஆனால் எனது மனதை கல்லாக்கிக்கொண்டு அவனை குறித்த பெண்ணிடம் ஒப்படைத்தேன். ஆனால் தற்போது எனது மகன் இறந்து விட்டதாக தெரிவிக்கின்றனர்” என குறித்த பெண் கண்ணீருடன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

நாவற்குடாவில் மரணமடைந்த குறித்த சிறுவன் மாடிப்படியிலிருந்து விழுந்ததாக வளர்ப்புத்தாய் கூறியிருந்த போதும்,

ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பிரேதபரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட வளர்ப்புத்தாய் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

You might also like