யாழில் வாள்வெட்டுக்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் கொழும்பில் கைது! பெயர்களும் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் தனஞ்சயன், பாரத் மற்றும் விக்ரம் என்ற மூவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் இணைந்து இந்த அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான நபர்கள் மூவரும் தப்பி ஓடி, கொட்டாஞ்சேனை பகுதியில் வீடொன்றில் மறைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பாக பொலிஸார் தேடுதல் நடாத்தி வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை கொட்டாஞ்சேனை பகுதியில் மூவரும் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக பல விசாரணைகளை மேற்கொண்டதுடன், மூவர் தொடர்பான தகவல்களை வெளியிடவும் பொலிஸார் தயக்கம் காட்டி வந்துள்ளனர்.

தொடர்ந்து குறித்த மூவரையும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.

இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like