வவுனியா பொலிஸ் நிலையத்திற்குள் கட்டிடம் கட்ட தடை விதித்த நகரசபை தலைவர்

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான காணியில் நீண்ட காலமாக பொலிஸார் குடியமர்ந்து வருகின்ற நிலையில் குறித்த காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு எழுத்தித்தருமாறு கோரி நகரசபைக்கு வந்த பொலிஸாரை வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் திருப்பியனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபைக்கு சொந்தமான காணியில் நீண்ட காலமாக வவுனியா பொலிஸ் நிலையம் இயங்கி வருகின்றது. இதனை விடுவிக்குமாறு பல தடவை நகரசபையினால் கோரிக்கை விடப்பட்ட போதிலும் இதுவரை பொலிஸார் குறித்த காணியை விடுவிக்காது அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந் நிலையில் இன்றைய தினம் நகரசபைக்கு வருகை தந்த இரு பொலிஸார் குறித்த காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு எழுதி தருமாறும் பாரிய பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தமக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையினால் அதற்காகவே காணியை கோருவதாகவும் தெரிவித்தனர்.

எனினும் குறித்த காணியை எக்காரணம் கொண்டும் பொலிஸாருக்கு தரமுடியாது என நான் தெரிவித்துடன் வவுனியா மக்கள் குறித்த காணியை நகரசபை பெற்று அபிவிருத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிநிற்கும் போது இவ்வாறான செயலை செய்து மக்களுக்கு துரோகம் செய்ய முடியாது என தெரிவித்து திருப்பியனுப்பிவிட்டேன் என தெரிவித்தார்.

You might also like