சுனாமியைவிடவும் அதிவேக அதிரடியாய் இலங்கையில் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு !

சுனாமியைவிடவும் அதிவேக அதிரடியாய் இலங்கையில் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பும், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது.

இதற்குப் பின்னால் கூறப்படும் கருத்துக்கள் எவ்வாறு அமையினும் இப்பிரச்சினையில் ஈழத் தமிழர்கள் சம்மந்தப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது முக்கிய விடயமாகும்.

சிலவேளை ஈழத்தமிழ் தரப்பினர் கொலைச்சதி மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு என்பவற்றுடன் சம்மந்தப்பட்டிருந்தால் நிச்சயம் தமிழர்களின் இரத்தம் ஆறாய் ஓடியிருக்கும். அந்த வகையில் இப்பிரச்சினையில் தமிழர்கள் சம்மந்தப்படவில்லை என்பது பெரும் ஆறுதலாகும்.

இப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுள்ள ஆட்சி கவிழ்ப்பு மற்றும் ஆட்சி மாற்றம் என்பன பற்றியும் இவை தொடர்பாக எழுந்துள்ள அரசியல் யாப்பு மீறல்கள் சம்மந்தமான பிரச்சினைகள் பற்றியும் ஆராய்வதையே இக்கட்டுரை கருத்தில் எடுக்கிறது.

சற்றும் எதிர்பாராத விதமாக தனது முன்னாள் நண்பனும் பின்னாள் எதிரியுமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் தனது நண்பனாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரவணைத்து ஆட்சி கவிழ்ப்பையும், ஆட்சி மாற்றத்தையும் மேற்கொண்டார்.

தன் மீதான கொலைச் சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பின்னணியில்இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தான் பதவியில் இருந்து அகற்றி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த நேர்ந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த கொலைச் சதி முயற்சி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக என்போர் மீது குற்றஞ்சாட்டும் கருத்துக்கள் வெளியாவதுடன் இந்தியாவின் புலனாய்வுத்துறையான ‘றோ’ அதிகாரிகளையும், இலங்கையின் பொலிஸ் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த நாலக்க டிசில்வாவையும், பாதாள உலகத் தலைவர் என்று கூறப்படுகின்ற மாகந்துர மதுஸ் என்பவரையும் சம்மந்தப்படுத்தி கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய செய்திகளின் பின்னணியிற்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இங்கு மேற்படி ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டமை அரசியல் யாப்பு விதிக்கு முரணானது என்று கூறி ரணில் விக்ரமசிங்க பதவி விலக மறுத்து தானே தொடர்ந்தும் பிரதமர் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் பிரதமருக்குரிய வதிவிடமானஅலரி மாளிகையில் இருந்து வெளியேற மறுக்கின்றார்.

அதேவேளை அரசியல் யாப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே பிரதமர் ரணிலை பதவி நீக்கம் செய்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக யாப்பு விதிக்கு உட்பட்ட வகையில் தான் நியமித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவருகிறார்.

இந்த நிலையில் புதிதாக பிரதமராக பதவியேற்ற மகிந்தராஜபக்ச அமைச்சரவையை அமைத்து தானே பிரதமர் என்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறார்.

இங்கு யார் கூறுவது சரியானது என்ற கேள்விக்கு அரசியல் யாப்பு ரீதியான பதிலை மட்டும் நோக்குவோம்.

2015ஆம் ஆண்டு ‘நல்லாட்சி, நல்லிணக்கம்’ என்பதன் பேரில் சிறிசேன-ரணில் தலைமையில் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் அவசர அவசரமாக அரசியல் யாப்பில் 19வது திருத்தம் ஒன்றை மேற்கொண்டனர்.

ஜனாதிபதிக்கும் – பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் இடையே அதிகாரங்கள் பகிரப்பட்டன.

இதன்படி ஜனாதிபதிக்கு இருந்த முக்கிய அதிகாரங்கள் சில பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் உரியதாக மாற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது என்று யாப்பு மாற்றப்பட்டது.

அப்படி நான்கரை ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதாயின் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் குறையாத வாக்குக்களினால் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின்அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியும்.

மேலும் பிரதமராக நியமிக்கப்பட்ட ஒருவரை, அவர் பதவியேற்றதிலிருந்து அவருக்குரிய பதவிக் காலம் முடியும் முன் அவரை ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் யாப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

யாப்பின் 42(4) பிரிவின்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறக்கூடியவர் என்று ஜனாதிபதி கருதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அவர் பிரதமராக பதவியில் அமர்த்தலாம்.

அதன்பின்பு அவர் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்.

இதன் பிரகாரம் பிரதமரான ரணில் தனக்குரிய நாடாளுமன்ற அங்கத்துவக் காலம் முடியும் வரை பதவியில் இருப்பார். அவரது பதவியானது அவர் இறந்து போகுமிடத்து, அல்லது அவர் கையெழுத்திட்டு பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்குமிடத்து, அல்லது அவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி விலக்கப்படுமிடத்து அவரது பதவி வெற்றிடமாகிறது.

அவ்வாறு பிரதமர் பதவி வெற்றிடமாகும் நிலையிற்தான் மீண்டும் ஒருவரை மேற்படி 42(4) பிரிவின் கீழ் பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்க முடியும்.

இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது மேற்கொள்ளப்பட்டநம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியளிக்காத நிலையில் அவர் அரசியல் யாப்பு ரீதியாக பலமான நிலையிலேயே இருந்தார்.

இந்த நிலையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு அரசியல் யாப்பில் இடமே இல்லை. இது விடயத்தில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், நாடாளுமன்றத்திற்கும் அதிகாரங்களை பகிரும் விடயத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் மிக பலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரதமர் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடையவரே தவிர ஜனாதிபதிக்கு அல்ல.

எனவே ஜனாதிபதியால் பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாது. ஆதலால் பிரதமரை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு.

அது ஜனாதிபதிக்கு அல்ல. ஜனாதிபதி இங்கு ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்ததிலும், மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்ததிலும் என இரண்டு விடயங்களிலும் அரசியல் யாப்பை மீறியுள்ளார்.

ஆனால் இவ்வாறு இந்த அரசியல் யாப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் மீறத்துணிந்ததற்கு பிரதான பலமாக அமைந்திருப்பது மஹாசங்கமும், சிங்கள இராணுவமுமாகும்.

மஹாசங்கத்தினர் மத்தியிலும், இராணுவத்தினர் மத்தியிலும் இந்திய எதிர்ப்புவாதம், தமிழின எதிர்ப்புவாதம் என்பனவற்றின் பேரால் குறிப்பாக மகிந்த ராஜபக்சவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் ஆதரவுண்டு.

இந்த ஆதரவுத்தளத்தை பலமாகக் கொண்டு இந்த அரசியல் யாப்பு மீறல்களை அவர்கள் செய்யத் துணிந்தனர்.

இவ்வாறு இலங்கையில் அரசியல் யாப்பை மீறுவது என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல.

குறிப்பாக தமிழர் தொடர்பான விவகாரங்களில் அரசியல் யாப்பை மீறும் மரபு சிங்கள அரசியலில் வேரூன்றியுள்ளது.

சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் 29வது பிரிவு சிறுபான்மையினங்களின் பாதுகாப்பிற்கென வகை செய்யப்பட்டிருந்தது.

அந்த விதியை மீறி மலையகத் தமிழரின் வாக்குரிமை, குடியுரிமை என்பன 1949ஆம் ஆண்டு பறிக்கப்பட்டதுடன் 1956ஆம் ஆண்டு மேற்படி 29வது பிரிவை மீறி தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இங்கு மலையகத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் தொடர்பாக அரசியல் யாப்பு விதியை மீறும் மரபு வேர் விட்டது.

ஓர் அரசியல் யாப்பில் உருவாக்கப்படும் விதிகளானவை மேலும் வளர்ச்சி அடைவதுதான் அரசியல் யாப்பு மரபாகும். இதனைத்தான் அரசியல் யாப்பு வளர்ச்சி என்று அழைப்பர்.

ஆனால் இலங்கையில் சிங்களம் அல்லாத ஏனைய இனங்கள் பொறுத்து இந்த விதி தேயும்மரபாக அமைந்ததே தவிர வளரும் மரபாக அமைய மறுத்தது.

அதாவது சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பிற்கு என்று கூறி உருவாக்கப்பட்ட 29வது பிரிவானது 1972ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பில் நீக்கப்பட்டது. இவ்வாறு நீக்கப்பட்டமை கூட அரசியல் யாப்பு வளர்ச்சி மரபிற்கு முரணானது.

மேலும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியல் சட்டத் திருத்தம் அரசியல் யாப்பில் 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு போதிய தீர்வாக அமையவில்லை என்பது ஒருபுறமிருக்க அந்த திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரம் உட்பட்ட அதிகாரங்களைக் கூடசிங்கள ஆட்சியாளர்கள் நிறைவேற்றாது நிராகரித்து வருகிறார்கள்.

இது நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட தமது யாப்பையே அவர்கள் மீறியும், நிராகரித்தும் வருவதை காட்டுகிறது.

மேலும் 2001ஆம் ஆண்டு கையெழுத்தான ரணில்-பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தங்கூட அரசியல் யாப்பை மீறிய ஒரு நடைமுறைதான்.

அதாவது இலங்கை யாப்பில்கூறப்பட்டுள்ள இறைமை, தன்னாதிக்கம், பிரதேச ஒருமைப்பாடு என்ற விடயங்களை மீறும் வகையில் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்தது. அதாவது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு உரியதென பிரதேசங்கள் குறித்து ஒதுக்கி வரையப்பட்டு, அங்கு புலிகளின் நிர்வாகம் செயற்படுவதையும் அங்கீகரித்து அந்த ஒப்பந்தம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினாலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனினாலும் கையெழுத்திடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தம் உண்மையில் மேற்கூறப்பட்ட இலங்கை அரசின் இறைமை, தன்னாதிக்கம், பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றிற்கு முரணாகவே அமைந்திருந்தது.

ஆனால் புலிகளின் அரசியல் இராணுவ ரீதியான பலத்தின் பின்னணியில் இலங்கை அரசிற்கு ஏற்பட்டிருந்த சவாலையும், நெருக்கடியையும் சமாளிக்க புலிகளுடன் ஒப்பந்ததத்திற்கு போவதைத்தவிர வேறுவழி இல்லாத சூழலில் சிங்கள ஆட்சியாளர்கள் மேற்படி ரணில்-பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது.

இத்தகைய நெருக்கடியின் போது தமது பக்க நலனைக்கருத்திற் கொண்டு இவ்வாறான அரசியல் யாப்பு மீறலை சிங்களத் தலைவர்கள் ஏற்று நடந்தனர் என்பதும் இங்கு கவனத்திற்குரியது.

இவ்வாறு அரசியல் யாப்பிற்கு முரணாக நடப்பது அதனை மீறுவது, அதனை நிராகரிப்பது, செயற்படுத்த மறுப்பது என்பனவெல்லாம் தமிழர் விவகாரத்தில் எப்போதும் நடந்துவரும் இயல்பான விடயங்களாகும்.

ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் யாப்பு நெருக்கடியானது நேரடியாக தமிழர் பிரச்சினை சம்மந்தப்பட்டதாக அல்லாமல் அது சிங்கள ஆளும் குழாத்தினர் மத்தியில் உள்ள அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாக அமைந்துள்ள நிலையில் அதனை சிங்களத் தலைவர்கள் ஒரு பிரச்சினையாக முன்னிறுத்தியுள்ளனர்.

இது நேரடியாக தமிழர் சம்மந்தப்பட்ட யாப்பு மீறலாக அமைந்திருந்தால் சிங்கள தரப்பினர் இதனை அப்படியே நியாயப்படுத்தித் தம் போக்கை நிறுவி செயற்பட்டிருப்பார்கள்.

ஆனால் இது சிங்கள ஆளும் குழாத்தின் மத்தியில் உள்ள அதிகாரப் போட்டி தொடர்பானதாக இருப்பதால் இந்த யாப்பு மீறலைப் பற்றி நாடு தழுவிய ரீதியில் பேசப்படும் நிலையும் நாடு தழுவிய அரசியல் சிக்கலாக இது தலையெடுக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம். என்னவென்றால் தமிழருக்கு எதிராக தொடங்கிய யாப்பு மீறல் மரபு அதன் வளர்ச்சிப் போக்கின் படி சிங்கள ஆளும் குழாத்தினருக்கு இடையேயான யாப்பு மீறலாக வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆதலால் தமிழருக்கு எதிரான ஒடுக்கு முறையின் அடியிலிருந்து சிங்களவர்கள் தங்களுக்கு எதிரான ஒடுக்கு முறையையும் தாங்களே ஆரம்பித்துள்ளனர் என்பதே உண்மையாகும்.

பிரதமரது நாடாளுமன்ற அங்கத்துவம் வெற்றிடமாகாத இடத்தும், நாடாளுமன்றம் கலைக்கப்படாத இடத்தும் பிரதமராக தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க இருக்க முடியும் என்ற நிலையில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு ஒரு நடைமுறை சார்ந்த அதிகாரம் இருப்பதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கூறுகிறார்.

அரசியல் யாப்பில் நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதியால் கலைக்க முடியாது என்ற நிலையில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வேறு எழுத்து ரீதியான ஏற்பாடுகள் யாப்பில் இல்லை.

ஆனாலும் இந்நிலையில் நடைமுறையில் பிரித்தானிய “வெஸ்ட்மினிஸ்டர்” நாடாளுமன்ற மரபு ஒன்றை பின்வருமாறு மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியும் என்று கூறுகிறார்.

அதாவது அரசாங்கம் செயற்படுவதற்கான நிதி ஒதுக்கீட்டினை நாடாளுமன்றம் அங்கீகரிக்காது இருக்கும் இடத்து அரசாங்கம் செயற்பட முடியாத சூழலில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் மரபு ரீதியாக பிரித்தானிய மன்னருக்கு உண்டு.

அப்படியே தற்போது மகிந்தராஜபக்சவை பிரதமராகக் கொண்ட அரசாங்கத்திற்கான இடைக்கால நிதி ஒதுக்கீட்டை நாடாளுமன்றம் நிறைவேற்றாத பின்னணியில் அரசாங்கம் செயலற்றுவிட்டது என்று கூறி அத்தகைய விசேட நிலையில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கூறுகிறார்.

அதாவது மகிந்த ராஜபக்சவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காமல் போகுமிடத்து இவ்வாறு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்று ஒரு வழி சொல்கிறார்.

இது ஒரு வலிந்த காரணம். உண்மையில் யாப்பில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு எழுத்து வடிவிலான எந்த அதிகாரமும் காணப்படவில்லை. அப்படியிருந்தும் பிரித்தானியமரபை வலிந்து துணைக்கு இழுத்து அதன் மூலம் நாடாளுமன்றத்தை கலைக்கும் ஒரு சூழ்ச்சியாகவே இதுவும் அமைய முடியும்.

இது ஒரு நடைமுறை சார்ந்த பலத்தின் அடிப்படையில் பலாத்காரமாக செய்வதற்கான ஒரு வெறும் சாக்குப் போக்கு மட்டுமே.

எப்படியோ ஜனாதிபதியால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டமையும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமையும் அரசியல் யாப்பிற்கு முரணான விடயங்களாகும்.

இது அரசியல் சட்ட விவகாரங்களுக்கு அப்பால் அரசியல் ரீதியாக மேற்படி இருதரப்பினருக்கும் இருக்கக்கூடிய உள்நாட்டு வெளிநாட்டு பலப்பரீட்சையின் பிரகாரமே அதற்குரிய இறுதித் தீர்வை அடையும்.

பொது எழுத்தாளர் M.Thirunavukkarasu

You might also like