மைத்திரியின் அஸ்திரமும்! இரு கருக்குப்பட்டய முனையில் கூட்டமைப்பும்!!

இலங்கைத்தீவில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்ற வினாவுக்கு அடுத்தவாரம் விடைகிட்டக்கூடும் என நம்பி-கை வைப்போருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் புதிர் அவிழ்வதற்கு சற்றேறக் குறைய இன்னும் 4 நாட்கள் தான் உள்ளன.

ஆனால் எதிர்வரும் 14 ஆம் திகதி சிறிலங்கா நாடாளுமன்றம் கூடினாலும் கூட அதற்குப்பின்னர் எழக்கூடியசூழல் அலரிமாளிகையை விட்டு அகலாத ரணிலை பதவியில் அமர்த்துமா என்பது ஒரு முக்கிய வினாவாகவே உள்ளது.

நாடாளுமன்றத்தைக்கூட்டியவுடன், மகிந்தவோ அல்லது ரணிலோ யாரென்றாலும் அவர்களின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்குரிய வகையில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தும்படி பல இடித்துரைப்புக்குரல்கள் வந்துவிட்டன.

இறுதியாக ஐரோப்பிய ஒன்றியம் இந்த இடித்துரைப்பை விடுத்துள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தை உடனடியாககூட்டுங்கள் என்ற குரல்கள் இவ்வாறு விடுக்கப்பட்டபோதும் அவை கவனத்தில் எடுக்கப்படவில்லை.

ஆவை ஒருவாறாகப் போக்குக்காட்டப்பட்டு தற்போது இன்னும் 4 நாட்களில் மைத்திரி மகிந்த கூட்டணி சொன்;ன அந்த நாளும் வரப்போகின்றது

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு மதிப்பளித்தே 16 ஆந்திகதி என்ற முன்னைய இலக்கிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்ட மைத்திரி நடவடிக்கை எடுத்துள்ளதாக எஸ்.பி.திசாநாயக்கபோன்ற மைத்திரி மகிந்தக்கூண்டுக்கிளிகள் பேசுகின்றன.

நகைச்சுவை நடிகர்வடிவேலுவின் பாணியில் சொன்னால் இப்படியெல்லாம் பேசுவதற்கு இவர்கள் றூம் போட்டு யோசித்துக்கொள்வர்களோ என்னவோ.

நாடாளுமன்றத்தை உடனடியாககூட்டுங்கள் என இரண்டுவாரங்களுக்கு முன்னரே ஐ.நா செயலாளர்நாயகம் அன்ரனியோ குத்தரஸ் கோரிய நிலையில் அவருக்கு அப்போது பெப்பே காட்டியவர்கள் இப்போது அவரது கோரிக்கைக்காகவே (இரண்டு நாட்களுக்கு முன்னர்) நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக சொல்லி விதூஷகன்கள் ஆகின்றார்கள்.

இதுமட்டும்லலாமல் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர் 7 தடவைகள் ஒத்திவைத்தார் பிரேமதாச நான்கு தடவைகள் ஒத்திவைத்தார் சந்திரிக்காவும் மஹிந்தவும் தலா ஐந்து தடவைகளும் ஒத்திவைத்தனரே இவற்றைவிடவா அதிகம் மைத்திரி அள்ளியெடுத்தார்? ஒத்திவைத்தார் என ஒத்தூதியும்கொள்கின்றார்கள்

நாடாளுமன்றத்தைக்கூட்டியவுடன் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என மகிந்த அணிசொல்கிறது.அதேபோல எதிர்வரும் 14 இல் ஐக்கியதேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என யானைகள் மேற்பார்த்த மறுதரப்பும் கூறிக்கொள்கின்றது.

ஆனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் நேற்று வெளிப்பட்ட மைத்திரியின் கருத்து வேறுஒரு செய்தியை சொல்லமுனைகிறது.

ஏற்கனவேஎடுக்கப்பட்ட தீர்மானத்தில் இருந்துஎக்காரணம் கொண்டும் தான் பின்வாங்கப்போவதில்லை எனவும் இதுவரைதான் ஒரேயொரு துருப்புச்சீட்டை மட்டும் அஸ்திரமாக பயன்படுத்தியிருப்பதால் இன்னும் பல அஸ்திரங்கள் தனது அம்புறாத்துணியில் இருப்பதாகவும் மைத்திரி சொல்லியிருக்கிறார்.

தான் விரும்புவதைப்போல ஐக்கியதேசியக்கட்சி தனக்கு ஒத்துழைக்காமல் விட்டால் அரசியலமைப்பின்படி சட்டரீதியான துருப்புச்சீட்டுக்களைக்கொண்டு நிலைமையை கையாள்வேன் என்பதும் அவரது எச்சரிக்கை.

பொதுவாக எதிர்பார்கப்படுவது போல எதிர்வரும் 14 க்குப்பின்னர் சிறிஜெயவர்த்தனபுர அரங்கில் ஒருவேளை பெரும்பான்மையை நிருபிக்கும் ஆட்டம் இடம்பெற்றால் (இடம்பெறக்கூடுமென நம்புவோமா!) அந்த ஆட்டத்தில் யார் வென்றாலும் தோற்றாலும், இலங்கையின் அரசியல் களம் குழம்பிய குட்டையாகவே இருக்கும் சாத்தியங்கள் உள்ளன

ரணில் அல்லது மகிந்தவின் அரசாங்கமாக ஏதாவது ஒன்று அமைந்தாலும் இ அதன் தீர்மானம் எடுக்கும்வலு கேள்விக்குரியதாகவே இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் 2019ஐ ஊடறுத்துச்செல்லும் இந்த இழுப்பாணி சப்பாணி நிலையும் உருவாக்கக்கூடும்.

ஆகமொத்தம் இலங்கைத்தீவின் தற்போதைய நிலை அரசியல் குழப்பங்களுக்குரியதாக இருந்தாலும் மைத்திரியும் தன்னிடம் சில மூலோபாயத்திட்டங்கள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த வெளிப்படுத்தலானது. சிங்களமக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லியுள்ளது தமிழ்மக்களை மையப்படுத்திய கொழும்பின் அதிகாரத்தைப்பொறுத்தவரை அதில் அமரும் இரண்டுதேசியக்கட்;சிகளின் உள்ளுடனும் ஒன்றுதான் என்பது வெளிப்படையானது.

ஆனால் சிங்களமக்களைப்பொறுத்தவரை 2015இல் கொஞ்சம் முற்போக்குவாதியாக கருதப்பட்ட மைத்திரியின்சாயம் அவரது நகர்வுகளின் ஊடாக வெளுத்துவிட்டது.

இதன் உதாரணங்களில் ஒன்றாக ஓரினச்சேர்க்கையாளர்களுக்குரிய சிங்களப்பதமான சமனலயோ( வண்ணத்துப்பூச்சிகள் ) என்றபதத்தை ரணில்தரப்பை நோக்கி கேலியாக எறிந்து தனது முதற்குடிமகன் தகுதியை தானே உரசினார்.

அடுத்தகட்ட தவணைஆட்சிக்கான அவரது ஆவல் இப்போது அவரை புதிய இடத்துக்குள் கொண்டு சென்றிருப்பதால் அவரை முன்னர் கைதூக்கிவிட்ட சமூக இயக்கங்கள் இப்போது வாயடைத்து நிற்கின்றன.

இந்த நிலையில் இன்னும் சில அஸ்திரங்கள் தனது அம்புறாத்துணியில் இருப்பதாகச்சொல்லி ஒட்டு மொத்தநாட்டுக்கும் தளம்பல் நிலையை உருவாக்கிக்கொள்கின்றார்.ஆகமொத்தம் 2015 இல் இருந்த மென்மை நிலையைவிட அதிகாரமிக்கவராக தன்னைநிலைநிறுத்தும் தோற்றப்பாட்டில் மைத்திரி இருப்பது தெரிகின்றது.

இதன் ஒரு அங்கமாக இதுவரை சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழிருந்த காவற்துறையை தனக்கு கீழ்உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவர் கொண்டுவந்துவிட்டார் இதேபோல சிறிலங்கா மத்திய வங்கி மீண்டும் நிதிஅமைச்சின் கீழ், கொண்டுவரப்பட்டும் விட்டது

அதாவது தற்காலிகமாவேனும் அதிகாரத்தை பங்குபோட்டு ஆடும் ஒரு ஆட்டத்தில் மைத்திரியும்மகிந்தவும் தீவிரமாகின்றனர்.

அவர்களின் இந்தஆட்டத்துக்கு எதிராக ஒரு பலமாக ஊடறுப்பைச்செய்வதற்கு ரணிலும் சபாநாயகர்கருஜெயசூரியவும் முயன்றாலும் எல்லாம் வழமைபோல நடக்கிறது என்பதைக்காட்ட மைத்;திரி முயல்கிறார். இதன் அடிப்படையில் நேற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குரிய அபிவிருத்திக்காக என அமைக்கப்பட்ட அரசதலைவரின் விசேட செயலணி நான்காவது தடவையாக மைத்திரிதலைமையில் கூடிப்பேசியது.

இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் என்றவகையில் டக்ளஸ் தேவானந்தாவுடனும் கடந்தவாரம் தனது கைகளில் இருந்து பீறிட்டுச்சென்ற வியாழேந்திரன் ஆகியோர் சகிதம் இரா. சம்பந்தனும் இருந்து பேசவேண்டிய நிலை உருவாகியிருப்பதையும் இங்கு அவதானிக்கவேண்டும்

சரி இப்போது இந்த நிலையில் தமிழர்தரப்பின் ஆட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தபேசுபொருளுக்கும் இடமிருக்கிறது. குறிப்பாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கவேண்டுமெனவும் கடும்நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டுமென்ற குரல்களும் எழுந்துள்ளன.

ஆனால் கூட்டமைப்பு நிபந்தனையுடன் ஆதரவு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாடு இப்போதைய கட்டத்தில் எந்தளவுக்கு சரியானது என்பதில் கேள்விகள் இருக்கின்றன. ஏனெனில் இது இருகருக்கு பட்டயம் போல இரண்டு பக்கங்களில் வெட்டக்கூடியது என்பதால் இதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாத்திரம் அதிக உற்றுநோக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

பொது எழுத்தாளர்  Prem

You might also like