கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் 2011 ம் ஆண்டுக்கு பின்னர் 8 ஆயிரத்து 568 காணி அனுமதி பத்திரம் வழங்கிவைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 2011ம் ஆண்டிற்குப் பிற்பாடு புதிதாக 8 ஆயிரத்து 568 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 3 ஆயிரத்து 260 அனுமதிப் பத்திரங்கள் உறுதி செய்தும் வழங்கியுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் நகரை உள்ளடக்கியதிம் அதிக சனத்தொகை கொண்டதுமான கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவானது 42 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டது. இங்கு 23 ஆயிரத்து 791 குடும்பங்களைச் சேர்ந்த 76 ஆயிரத்து 953 அங்கத்தவர்கள் வசிக்கின்றனர்.

இவ்வாறு வசிக்கும் குடும்பங்களில் 2011ம் ஆண்டிற்குப் பிற்பாடு புதிதாக 8 ஆயிரத்து 568 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உரிமையாளர்களிடம் இருந்த அனுமதிப் பத்திரங்களின் பிரதி மாவட்டத்தில் இல்லாத நிலையில் அவற்றினை திருகோணமலையிலுள்ள உள்ள காணி ஆணையாளரின் அலுவலகத்திற்கு அனுப்பி அவை உண்மைப்பிரதி என உறுதி செய்த அனுமதிப்பத்திரங்களாக  மேலும் 3 ஆயிரத்து 260 அனுமதிப் பத்திரங்கள் உள்ளன.

இதேபோன்று காணி உறுதிகள் உரிமையாளரிடம் இருந்தபோதும் மாவட்டச் செயலகத்தில் பிரதி இல்லாதவைகளில் அவற்றினை கொழும்பு தலமையகத்திற்கு அனுப்பி உறுதி செய்து வழங்கியமையில் 1658 உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று உரிமையாளர்களிடம் இருக்கும் உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்களின் பிரதிகள் செயலகத்தில் உள்ள வகையில் சுமார் 4 ஆயிரத்து 500 ஆவணங்கள் இனம் கானப்பட்டன.

இதேவேளை சகல ஆவணங்களும் சரி செய்யப்பட்டு அனுமதிக்காக காணிக் கச்சேரிகள் நிறைவு செய்து விரைவில் அனுமதிப் பத்திரங்கள் வழங்க கூடிய நிலையில் 2011 அனுமதிப்பத்திரங்கள் உள்ளன. இவற்றின் பிரகாரம் கரைச்சிப் பிரதேசத்தில் வசிக்கும் 23 ஆயிரத்து 790 குடும்பங்களில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணி தொடர்பான பிணக்குகள் சீர் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் முறையில் அனுமதிப்பத்திரங்களை  உறுதியாக மாற்றம் செய்து பெறும் நடவடிக்கையின் கீழ் இலங்கையில் விண்ணப்பித்த காணி அனுமதிப்பத்திரகார்ர்களில் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்திற்கே முதன் முதலாக 25 உறுதிகள் கிடைத்துள்ளன. அதேவேலை அனுமதிப் பத்திரங்களை உறுதியாக மாற்றம் செய்யும் விண்ணப்பத்திற்கான தகுதியை பூர்த்தி செய்த மேலும் 3 ஆயிரத்து 140 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like