கிளிநொச்சியில் மாணவியை தாக்கிய அதிபருக்கெதிராக பொலீசில் முறைப்பாடு

கிளிநொச்சி சாந்தபுரம் பாடசாலை மாணவி வீட்டுவேலை பூர்த்தி செய்யவில்லை என்பதனால் அதிபர் தாக்கியதில் மயக்கமடைந்த மாணவியை மயக்கம் தெளியும் வரையில் இரண்டு மணிநேரமாக வைத்திய உதவிக்கு கொண்டு செல்லாத அதிபர் மீது மாணவியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் 8 மாணவி காலை வகுப்பிற்காக அதிகாலை 6 மணிக்கு அதிபரினால் தினமும்  பாடசாலைக்கு அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு செல்லும் மாணவிகள் வீட்டுப் பணியினை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக குறித்த மாணவியை அதிபர் தாக்கியுள்ளார். அதன் காரணமாக மாணவி மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.

 இவ்வாறு மயக்கமுற்ற மாணவிக்கு எதுவித வைத்திய உதவியையும் வழங்காத அதிபர் பாடசாலையிலேயே வைத்திருந்துள்ளார். இதன் காரணமாக பதற்றமடைந்த சக மாணவர்கள் மயக்கமுற்ற மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறுகூறியபோதிலும் அதிபர் தடுத்து நிறுத்தியுள்ளார். குறித்த சம்பவத்தின்போது மேலும் ஓர் ஆசிரியரும் அதிபருடன் இருந்துள்ளார்.

இவ்வாறு பாடசாலயில் சம்பவம் இடம்பெற்றபோதும் ஒரு கிலோமீற்றருக்கும் உட்பட்ட பகுதியில் இருந்த மாணவியின் பெற்றோருக்கும் தகவல் அனுப்பப்படவில்லை.

 மாலையில் வீடு சென்ற மாணவியை அதிபரும் சக ஆசிரியரும் கடுமையாக அச்சுறுத்தி சம்பவம் தொடர்பினில் எவரிடமும் கூறக்கூடாது என எச்சரித்துள்ளனர். இதன் பின்னர் மாலையே தகவலறிந்த மாணவியின் தாயார் சம்பவம் தொடர்பினில் அறிந்து அதிபரிடம் சென்று நியாயம் கோரியபோது இனிமேல் அடிக்கவில்லை ஆனால் இது தொடர்பில் எவரிடமும் கூறக்கூடாது. என தெரிவித்துள்ளார்.

 இருப்பினும் அதிபரின் அசன்டையான பதில் தொடர்பில் திரிப்தியடையாத தாயார் சம்பவத்தை உடனடியாக கிராமசேவகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். கிராமசேவகர் அதிபரை அணுகி குறித்த விடயத்தினில் சமரசம் செய்ய முடியுமா என முயன்றபோதும் அதிபரின் செயலில் திருப்தி இன்மை காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1912 இலக்கம் மூலம் குறித்த விடயம் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 உடனடியாக செயலில் இறங்கிய பொலிசாரிடம மாணவியின் தாயார் எழுத்தில் முறையிட்டார் இதனையடுத்து அதிபர் நேற்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்து வைத்தியச் சான்றிதழைப் பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like