ஆறுவயது சிறுமியின் உயிரைக் காவு கொண்ட டெங்கு: கர்ப்பிணிப் பெண்ணின் உயிரையும் பறித்தது

டெங்கு நோயின் தாக்கத்தினால் திருகோணமலையினைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பள்ளத்தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காய்ச்சல் என திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இது குறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவலில், அப் பெண்ணிற்கு கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்திருந்ததாகவும், இந்நிலையில் டெங்கு நோயும் தாக்கியதனா்ல் சிகிச்சை கடினமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று முன் தினம், ஆறு வயது சிறுமி டெங்கு நோயினால் உயிரிழந்தார். திருகோணமலை கிண்ணியப் பிரதேசத்தினைச் சேர்ந்து இந்த சிறுமியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்த இரண்டு நாட்களில் இன்னொரு மரணம் டெங்கு மூலமாக நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், டெங்குத் தாக்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

டெங்கு நோயின் தாக்கத்தினால் கிண்ணியா வைத்தியாசாலையில் மட்டும் 57 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடு முழுவதும் டெங்கு நோய்த் தாக்கத்தினால், 3881 பேர் இனம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like