வவுனியா நகரசபையின் அறிவுறுத்தலையும் மீறி நடைபாதை வியாபார நிலையம் புனரமைப்பு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக காணப்படும் நடைபாதை ஓரத்திலுள்ள வியாபார நிலையங்கள் நேற்று காலை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை நகரசபை உப நகரபிதா தலையிட்டு தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்  மாலை குறித்த வியாபார நிலையங்கள் அனைத்தும் தடை உத்தரவுகளையும் மீறி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வியடம் குறித்து பொதுமக்கள் நகரசபை உப நகர பிதா சு. குமாரசாமியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.

இதையடுத்து நகரப்பள்ளி வாசல் தலைவருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு புனரமைப்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி திங்கட்கிழமை நகரசபையின் அனுமதியுடன் புனரமைப்புப்பணிகளை மேற்கொள்வதற்கு நகரசபை உப பிதாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று மாலை அவசர அவசரமாக வியாபார நிலையங்களின் புனரமைப்புப்பணிகள் உரிமையாளர்களால் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து நகரசபை உத்தியோகத்தர்கள் வியாபார நிலைய புனரமைப்புப்பணிகள் இடம்பெறுவதாகவும் அதனை நிறுத்துவதற்கும் சென்றிருந்தனர்.

இவ் விடயங்களை அறிந்து அப்பகுதியின் நிலைமைகளை அவதானித்து செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பள்ளிவாசலை அண்டிய பகுதிகளிலுள்ள நடைபாதை  வியாபார நிலையங்களிலிருந்து வெளியே வந்த சிலர் புகைப்படங்களை தமது தொலைபேசிவழியாக எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார் இதையடுத்து இரு பகுதியினருக்கும் இடையே சற்று குழப்ப நிலை உருவாகியதுடன் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகரசபையினரின் அறிவுறுத்தல்களைப்பின்பற்றாமல் நடைபாதையிலுள்ள வியாபார நிலையங்களை புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளதை வவுனியா மாவட்ட இளைஞர்கள் கண்டித்துள்ளதுடன் இதற்கான நடவடிக்கை ஒன்றினை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  தீபாவளி தினத்தில் இலுப்பையடிப்பகுதியிலுள்ள நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சிலரை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை நகரசபையினரால் இடம்பெற்றுள்ளதுடன் அவர்களின் விற்பனை பொருட்களையும் நகரசபை உத்தியோகத்தினர் எடுத்துச் சென்றிருந்ததுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like