வவுனியாவில் வலயக்கல்விக்கு முன்பாக தந்தையை விடுவிக்க கோரி பிள்ளைகள் போராட்டம்

வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிமனை முன்பாக இன்று (21.11.2018) காலை 10.30மணியளவில் தந்தையை விடுவிக்க கோரி அவர்களின் பிள்ளைகளினால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை, வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக கூறி, பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, பாடசாலை மாணவனை தாக்கினார் என்ற குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி, கைக்குழந்தை மற்றும் அப்பாடசாலையில் கல்வி கற்கும் அவருடைய இரண்டு மகள்களும் இணைந்து இவ் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள், பொலிஸாரே எமது முறைப்பாட்டை ஏற்காதது ஏன் , எங்களை பலவந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்திய முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருக்கு சட்ட நடவடிக்கை எடு , அதிபரின் பலவந்தமான ஆர்ப்பாட்டத்தில் இருந்து எங்களை மீட்க வந்த எங்கள் தந்தையை கைது செய்தது ஏன் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கறுப்பு பட்டியினை அணிந்தவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிள்ளைகள் தெரிவிக்கையில்,

எமது பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதன்போது எமது தந்தை எம்மை பாடசாலைக்கு உள்ளே செல்லுமாறு கூறுவதற்கு அவ்விடத்திற்கு வந்தார்.

அவ்வேளை அதிபரின் தம்பியும் அவரது நண்பர்களும் எமது தந்தையை தாக்குவதற்கு முயன்றனர். அப்போது அவ்விடத்தில் நின்ற போக்குவரத்து பொலிஸார் தந்தையை அதில் இருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, அப்பாடசாலையில் கல்வி கற்கும் அதிபரின் தங்கையின் மகனை வைத்தியசாலையில் அனுமதித்துடன் எங்களுடைய தந்தை, குறித்த மாணவனை தாக்கியதாக கூறி பொலிஸில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர்.

அதனடிப்படையில் பொலிஸார், தற்போது எங்களது தந்தையை கைது செய்துள்ளனர். ஆகையால் அவரை விடுதலை செய்தால் தான் நாங்கள் சாப்பிடுவோம், பாடசாலைக்கு செல்வோம், பரீட்சை எழுதுவோம்” என அப்பிள்ளைகள் குறிப்பிட்டனர்.

You might also like