யாழிலிருந்து வெளியேறிய ‘ஆவா குழு’ நாடு முழுவதிலும் தலைமறைவாகி உள்ளனர் : பொலிஸ் அறிவிப்பு

யாழ். குடா நாட்டை ஆட்டிப்படைத்த ஆவா குழுவினர் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் பரவியுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த ஆவா குழுவினர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி நாட்டின் பல பகுதிகளிலும் தலைமறைவாகி உள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் இயங்கும் ஆவா குழுவைப் போன்று பல்வேறு குழுக்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு இருப்பவர்களை விரைவில் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

யாழ். குடா நாடு உள்ளிட்ட வட பிராந்தியத்தில் நிலவும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை பகுதியில் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன், அவரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் யாழில் இருந்து தப்பி வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like