சாந்தபுரத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் பெண் ஒருவர் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு, நீதிமன்றம் பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும், அதற்கான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குமாறும் இதன்போது பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சாந்தபுரம் 8 ஆம் வீதி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 56 வயதான பெண், இராணுவத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரால் கூரான ஆயுதமொன்றினால் அண்மையில் தாக்கப்பட்டிருந்தார்.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை காட்டுப் பகுதிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றபோது, பெண் கூச்சலிட்டத்தை அடுத்து, அவரது கழுத்துப் பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்திவிட்டு சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 15 ஆம் திகதி நடத்தப்படவிருந்த அடையாள அணிவகுப்பு பொலிஸார் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.